ஸ்லெட்ஜிங் செய்த என்னை மன்னிப்பு கேட்கவைத்த மகான் சச்சின் டெண்டுல்கர்.. சக்லைன் முஷ்டாக் பகிர்ந்த சுவாரஸ்யம்

By karthikeyan VFirst Published Apr 25, 2020, 3:02 PM IST
Highlights

ஸ்லெட்ஜிங் செய்த தனக்கு சச்சின் டெண்டுல்கர் அமைதியான முறையில் பாடம் புகட்டி, தன்னை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கிய சம்பவம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் ஸ்பின்னர் சக்லைன் முஷ்டாக் மனம் திறந்து பேசியுள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் முதன்மையானவர் சச்சின் டெண்டுல்கர். 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி, 100 சதங்களுடன் 34 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்த மாபெரும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். 

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மிகவும் நேர்மையானவர், ஒழுக்கமானவர். களத்தில் அவுட்டே இல்லாததற்கு அம்பயர் அவுட் கொடுத்தால், மறுபேச்சின்றி வெளியேறும் சச்சின், அவர் அவுட் என்பது அவருக்கு தெரிந்தால் அம்பயர் அவுட் கொடுக்கும் வரை காத்திருக்க மாட்டார். அவராகவே வெளியேறிவிடுவார். அம்பயர் அவுட் கொடுக்காவிட்டாலும் கூட, அது அவுட் என்று அவருக்கு தெரிந்தால் நடையை கட்டிவிடும் நேர்மையானவர்.

அதேபோலவே எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்ய மாட்டார். தன்னை ஸ்லெட்ஜிங் செய்வோருக்கு வாயில் பதிலடி கொடுக்காமல் பேட்டில் பதிலடி கொடுக்கும் இயல்புடையவர் சச்சின். 

அதுமாதிரியான ஒரு சம்பவத்தைத்தான் பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் ஸ்பின்னர் சக்லைன் முஷ்டாக் பகிர்ந்துள்ளார். தான் சச்சினை முதல் முறையாக ஸ்லெட்ஜிங் செய்ததையும், அதுவே தனது கடைசி ஸ்லெட்ஜிங்காக அமைந்ததையும் பகிர்ந்துள்ளார் சக்லைன் முஷ்டாக். 

அந்த சம்பவம் குறித்து பேசிய சக்லைன் முஷ்டாக், 1997ல் கனடாவில் நடந்த சஹாரா கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சச்சின் பேட்டிங் ஆடியபோது, அவரை ஸ்லெட்ஜிங் செய்தேன். அவரிடம் என்ன சொன்னேன் என்பது சரியாக நினைவில்லை. ஆனால் அவர் எனக்கு அளித்த பதிலடி, என் நெஞ்சை தைத்ததால் இன்றும் அது நினைவிருக்கிறது. 

நான் அவரை ஏதோ சொல்லி ஸ்லெட்ஜ் செய்ய, என்னிடம் வந்த சச்சின், நான் உங்களிடம் தகாத முறையில் நடந்ததேயில்லையே... பின் நீங்கள் ஏன் என்னிடம் தவறாக நடக்கிறீர்கள் என்று கேட்டார். சச்சின் அப்படி கேட்டதும், எனக்கு மிகவும் தர்மசங்கடமாகிவிட்டது. எனக்கே என்னை நினைத்து வெட்கமானது. அவர் அப்படி கேட்டதும், அவரிடம் என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை. மேலும், உங்களை(சாக்லைன் முஷ்டாக்) ஒரு வீரராகவும் மனிதராகவும் உங்கள் மீது உயரிய மதிப்பீடு வைத்திருக்கிறேன் என்றார் சச்சின். இதையடுத்து அந்த போட்டி முடிந்ததும் அவரிடம் மன்னிப்பு கேட்டேன். 

அதன்பின்னர் அவர் எனது பந்தை பலமுறை பொளந்து கட்டியிருக்கிறார். ஆனால் நான் அவரை ஸ்லெட்ஜிங் செய்ததேயில்லை என்று சக்லைன் முஷ்டாக் கூறியுள்ளார். 

click me!