இதுல ஆச்சரியப்படுறதுக்கு எதுவுமே இல்ல.. ஏற்கனவே தெரிஞ்சதுதான்.. ரகசியத்தை உடைத்த ரோஹித் சர்மா

By karthikeyan VFirst Published Oct 7, 2019, 11:29 AM IST
Highlights

ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ஆட கிடைத்த முதல் வாய்ப்பையே வெகு சிறப்பாக பயன்படுத்தி 2 சதங்களை விளாசி அசத்தினார். 
 

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அபாரமாக ஆடி சதங்களையும் சாதனைகளையும் குவித்து சிறந்த வீரராக வலம்வரும் ரோஹித் சர்மாவிற்கு டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் இருந்துவந்தது. ரஹானே, ஹனுமா விஹாரி ஆகியோர் மிடில் ஆர்டர் செட் ஆகிவிட்டதால், ரோஹித்துக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் கூட அணியில் இருந்தும் ஆடும் லெவனில் எடுக்கப்படவில்லை. 

இந்நிலையில், தொடக்க வீரராக இறங்கிவந்த கேஎல் ராகுல், கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாகவே தொடர்ச்சியாக சொதப்பியதை அடுத்து, ரோஹித்தை தொடக்க வீரராக இறக்கலாம் என்ற கருத்து வலுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் ராகுல் படுமோசமாக சொதப்பியதை அடுத்து தென்னாப்பிரிக்க தொடரில் ராகுல் நீக்கப்பட்டு ரோஹித் சர்மா தொடக்க வீரராக இறக்கப்பட்டார். 

ஒருநாள் கிரிக்கெட்டிலும் மிடில் ஆர்டரில் படுமோசமாக சொதப்பிய ரோஹித், தொடக்க வீரராக இறங்கிய பின்னர் வேற லெவலில் ஆடினார். தொடக்க வீரராக இறங்கிய பின்னர்தான் அவரது கெரியரே மாறியது. அதுதான் அவரது கிரிக்கெட் கெரியரில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 

எனவே அதேபோலவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தொடக்க வீரராக இறங்கியதும் ரோஹித்துக்கு அப்படியான திருப்புமுனையாக இது அமையுமா என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. அதனால் அனைவரின் பார்வையும் கவனமும் ரோஹித்தின் மீதே இருந்தது. டெஸ்ட் அணியில் தனக்கான நிரந்தர இடத்தை தக்கவைத்துக்கொள்ள, சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் இறங்கிய ரோஹித் சர்மா, அனைவரும் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே அசத்திவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

தொடக்க வீரராக இறங்கிய முதல் இன்னிங்ஸிலேயே அபாரமாக ஆடி சதமடித்தார். எந்தவித டென்சனும் இல்லாமல் தனது இயல்பான ஆட்டத்தை ஆடி சதமடித்தார். வழக்கம்போலவே சதத்திற்கு பின்னரும் பெரிய இன்னிங்ஸ் ஆடினார். தொடக்க வீரராக இறங்கிய முதல் இன்னிங்ஸிலேயே 176 ரன்களை குவித்தார் ரோஹித் சர்மா. தன்னுடன் தொடக்க வீரராக இறங்கிய மயன்க் அகர்வாலுக்கும் நல்ல பார்ட்னராக இருந்து ஆலோசனைகளை வழங்கியதோடு நல்ல புரிதலோடு ஆடினார். 

முதல் இன்னிங்ஸில் சதமடித்த ரோஹித் சர்மா, இரண்டாவது இன்னிங்ஸிலும் அபாரமாக ஆடினார். இரண்டாவது இன்னிங்ஸில் விரைவாக முடிந்தவரை ரன்களை குவித்துவிட்டு தென்னாப்பிரிக்க அணியை பேட்டிங் ஆட விட வேண்டிய கட்டாயத்தில் இருந்தது இந்திய அணி. அதை புரிந்துகொண்டு அதிரடியாக ஆடி ரன்களை உயர்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக ஆடி சதமடித்தார். சதமடித்த பின்னர் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி மிரட்டிய ரோஹித் 127 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ரோஹித்தின் அதிரடி தான் இந்திய அணிக்கு உத்வேகத்தை அளித்தது. அதற்கு பின்னர் வந்த ஜடேஜா, கோலி, ரஹானே ஆகியோரும் ரோஹித் விட்டுச்சென்ற முமெண்ட்டத்தை விட்டுவிடாமல் அதை அப்படியே அதிரடியின் மூலம் தொடர்ந்தனர். 

தொடக்க வீரராக இறங்கிய முதல் போட்டியிலேயே இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த முதல் வீரர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ஆறாவது இந்திய வீரர் மற்றும் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனைகளையும் ரோஹித் நிகழ்த்தினார். எனவே இன்னும் 10-15 போட்டிகளில் ரோஹித் சர்மா தொடக்க வீரராக இறங்குவதை உறுதி செய்துவிட்டார். இன்னும் சில போட்டிகளில் இதேபோல் நன்றாக ஆடிவிட்டால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரோஹித் தொடக்க வீரராக இறங்குவது உறுதி. 

அனைவரின் கவனக்குவிப்பும் ரோஹித் மீது இருந்த நிலையில், நெருக்கடியான சூழலில் அபாரமாக ஆடி 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்ததோடு ஆட்டநாயகன் விருதையும் வென்றார் ரோஹித் சர்மா. 

ஆட்டநாயகன் விருதை வென்ற ரோஹித் சர்மா பேசும்போது, டாப் ஆர்டரில் இறங்குவது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. இந்த வாய்ப்புக்காக நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன். கவனம் முழுவதுமே போட்டியை வெல்வதில் தான் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, ஒருநாள் நான் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக இறங்க வேண்டியது இருக்கும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. வலைப்பயிற்சியில் கூட புதிய பந்தில் தான் நான் பேட்டிங் பயிற்சி செய்தேன். அதனால் நான் தொடக்க வீரராக இறக்கப்பட்டதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. 

சிவப்பு பந்து அல்லது வெள்ளை பந்து என எந்த பந்தில் ஆடுவதாக இருந்தாலும், பெரிய வித்தியாசம் எதுவுமில்லை. தொடக்கத்தில் மிகவும் கவனமாக ஆட வேண்டும். அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்தி, தவறு செய்துவிடாமல் ஆடவேண்டும். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்துகளை விட்டுவிட வேண்டும். உடம்புக்கு க்ளோசாக வரும் பந்துகளை ஆட வேண்டும். என்னிடம் இருந்து அணி நிர்வாகத்துக்கு சில எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அதைத்தான் நான் செய்ய முயற்சித்தேன். ரெக்கார்டை பற்றியெல்லாம் கவலைப்படவேயில்லை. போட்டியை வெல்ல வேண்டும் என்பது மட்டுமே ஒற்றை குறிக்கோள் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 
 

click me!