தோனியின் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய ரோஹித்.. சிஎஸ்கேவிற்கு எதிரான வெற்றி ரகசியத்தை உடைத்த ஹிட்மேன்

By karthikeyan VFirst Published May 8, 2019, 11:53 AM IST
Highlights

132 ரன்கள் என்பது மிகவும் எளிதான இலக்கு என்பதால், ரோஹித், டி காக் ஆகியோரின் விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே இழந்தபோதும், சூர்யகுமார் அவசரப்படாமல் நிதானமாகவும் தெளிவாகவும் ஆடினார். கடைசி வரை களத்தில் நின்று மும்பை இந்தியன்ஸை வெற்றி பெற செய்தார். 
 

ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறின. முதல் இரண்டு இடங்களில் இருந்த மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் நேற்று மோதின. 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பேட்டிங் ஆடியது. ஸ்பின் பவுலிங்கிற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தது ஆடுகளம். ஆடுகளத்தின் தன்மையை ராகுல் சாஹர், க்ருணல் பாண்டியா, ஜெயந்த் யாதவ் ஆகிய மூவரும் நன்கு பயன்படுத்தி கொண்டனர். சிஎஸ்கே வீரர்களை தொடக்கம் முதலே ரன் குவிக்கவிடாமல் கட்டுப்படுத்தியதோடு சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தோனியும் ராயுடுவும் சேர்ந்து ஓரளவிற்கு ரன் சேர்த்தனர். ஆனால் அது போதவில்லை. 

பும்ரா கடைசி ஓவரை அபாரமாக வீச, 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே வெறும் 131 ரன்களை மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே அணியில்ம் இம்ரான் தாஹிர், ஹர்பஜன், ஜடேஜா ஆகிய தரமான ஸ்பின்னர்கள் இருப்பதால், சிஎஸ்கே அணி கூடுதலாக 20 ரன்கள் அடித்திருந்தால் வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் 132 ரன்கள் என்பது மிகவும் எளிதான இலக்கு என்பதால், ரோஹித், டி காக் ஆகியோரின் விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே இழந்தபோதும், சூர்யகுமார் அவசரப்படாமல் நிதானமாகவும் தெளிவாகவும் ஆடினார். கடைசி வரை களத்தில் நின்று மும்பை இந்தியன்ஸை வெற்றி பெற செய்தார். 

போட்டி முடிந்த பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் சீனியர் வீரர்களாக இருந்தும்கூட ஆடுகளத்தின் தன்மையை சரியாக மதிப்பீடு செய்து ஆடவில்லை என்று தோனி அதிருப்தி தெரிவித்திருந்தார். 

சிஎஸ்கே அணிக்கு எதிராக தொடர்ச்சியாக நான்கு வெற்றிகள், இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு எதிரான 3 போட்டிகளிலும் வெற்றி என சிஎஸ்கேவை வைத்து தரமான சம்பவங்களை செய்த மும்பை இந்தியன்ஸின் கேப்டன் ரோஹித் சர்மா, அனைத்து அணிகளின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் சிஎஸ்கேவை மும்பை இந்தியன்ஸ் வீழ்த்தும் ரகசியத்தை வெளியிட்டார். 

போட்டிக்கு பின்னர் அதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, எங்களிடம் எல்லா மாதிரியான வீரர்களும் எந்த சூழலிலும் ஆடுவதற்கு ஏற்ற வீரர்களும் உள்ளனர். ஆடுகளத்தின் தன்மையையும் சூழலையும் சரியாக மதிப்பீடு செய்து ஆடியதால்தான் எங்களால் சென்னையில் சிஎஸ்கேவை வீழ்த்த முடிகிறது. ஆடுகளத்தின் தன்மையையும் ஆட்டத்தின் சூழலையும் சரியாக புரிந்துகொண்டு ஆடுவதால்தான் சிஎஸ்கேவிற்கு எதிராக நாங்கள் வெற்றி பெறுகிறோம் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

ஆடுகளத்தின் தன்மையை சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் சரியாக மதிப்பீடு செய்து ஆடாததால் ஏற்கனவே கேப்டன் தோனி கடுப்பில் இருக்கும் நிலையில், நாங்கள் ஆடுகளத்தை நன்றாக மதிப்பீடு செய்து ஆடுகிறோம் என்று கூறி வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினார் ரோஹித் சர்மா. 

click me!