ஜெயசூரியாவை ஜெயிக்க இன்னும் 9 ரன்கள் மட்டுமே தேவை.. 22 ஆண்டுகால சாதனையை தகர்த்தெறிய காத்திருக்கும் ஹிட்மேன்

By karthikeyan VFirst Published Dec 21, 2019, 4:00 PM IST
Highlights

இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் ரோஹித் சர்மா, மற்றொரு சிறந்த வீரரான விராட் கோலிக்கு நிகராக சதங்களையும் சாதனைகளையும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் குவித்துவருகிறார். 

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கும் இடையே சாதனைகளை குவிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் கெரியரில் தொடக்க காலம் சரியாக அமையவில்லை. அவர் ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக இறக்கப்பட்ட பின்னர், 2013ல் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்து சாதனை படைத்தார். அதன்பின்னர் இரண்டு இரட்டை சதங்களை அடித்துவிட்டார். ஒருநாள் கிரிக்கெட்டில் மொத்தம் 3 இரட்டை சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற சாதனையுடன் கடந்த சில ஆண்டுகளாக சதங்களை குவித்துவருகிறார். 

2019 உலக கோப்பையில் கூட 5 சதங்களை குவித்தார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 159 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

2019ம் ஆண்டு ரோஹித் சர்மாவிற்கு மிகச்சிறந்த ஆண்டாக அமைந்தது. உலக கோப்பையில் 5 சதங்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இறங்கி, தனது முதல் இரட்டை சதத்தை அடித்ததோடு, டெஸ்ட் அணியில் நிரந்தர இடம்பிடித்தது என இந்த ஆண்டு அவருக்கு அபாரமானதாக அமைந்தது. 

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக அடித்த சதத்தின் மூலமாகவே பல சாதனைகளை படைத்த ரோஹித் சர்மாவிற்கு, இந்த ஆண்டு முடியவுள்ள நிலையில், மற்றுமொரு சாதனை காத்திருக்கிறது. 

ரோஹித் சர்மா 2019ல் சர்வதேச கிரிக்கெட்டில், இதுவரை 2379 ரன்களை குவித்துள்ளார். ஒரு ஆண்டில் சர்வதேச போட்டிகளில் தொடக்க வீரர் அடித்த அதிகபட்ச ரன் 2387. இதை அடித்தது ஜெயசூரியா.  இலங்கை அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரரான ஜெயசூரியா 1997ல் அடித்த 2387 ரன்கள் தான், ஒரு ஆண்டில் தொடக்க வீரர் அடித்த அதிகமான சர்வதேச ஸ்கோர். எனவே ரோஹித் சர்மா இன்னும் 9 ரன்கள் அடித்தால் ஜெயசூரியாவின் சாதனையை முறியடித்துவிடுவார். 
 

click me!