அடுத்த ஐபிஎல் சீசனுக்கான கங்குலியின் கனவு அணி.. தலயை நிராகரித்த தாதா

By karthikeyan VFirst Published Dec 21, 2019, 3:05 PM IST
Highlights

அடுத்த ஐபிஎல் சீசனுக்கான கனவு அணியை கங்குலி தேர்வு செய்துள்ளார். கங்குலி தலைமையிலான அந்த அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களை பார்ப்போம். 

ஐபிஎல் 13வது சீசனுக்கான ஏலம் கடந்த 19ம் தேதி கொல்கத்தாவில் நடந்தது. மொத்தம் 338 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். இது சிறிய ஏலம் என்பதால், அணிகளின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவிலான வீரர்கள் குறைவாக இருந்ததால் சில வீரர்களுக்கு அதிக கிராக்கி இருந்தது. 

அந்த வகையில், ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் பாட் கம்மின்ஸ் அதிகபட்சமாக ரூ.15.5 கோடிக்கு கேகேஆர் அணியால் எடுக்கப்பட்டார். மேக்ஸ்வெல்லை பஞ்சாப் அணி ரூ.10.75 கோடிக்கும் கிறிஸ் மோரிஸை ஆர்சிபி அணி ரூ.10 கோடிக்கும் ஷெல்டான் கோட்ரெலை பஞ்சாப் அணி ரூ.8.5 கோடிக்கும் எடுத்தது. 

ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் நல்ல தொகைக்கு ஏலம் போனார்கள். மற்ற சில வீரர்களும் நல்ல விலைக்கு ஏலம் போன நிலையில், மார்டின் கப்டில், கோலின் முன்ரோ போன்ற பெரிய வீரர்கள் சிலர் ஏலத்தில் விலைபோகவில்லை. 

ஐபிஎல் 13வது சீசனுக்கான ஏலம் முடிந்த நிலையில், டைம்ஸ் நவ்விற்கு கங்குலி அளித்த பேட்டியில், அடுத்த சீசனுக்கு ஒரு சிறந்த கற்பனை அணியை தேர்வு செய்யுமாறு அவரிடம் கோரப்பட்டது. அதற்கு, இதுவெறும் ஜாலிக்காகத்தான் என்று சொல்லிவிட்டு ஒரு அணியை தேர்வு செய்தார். அந்த அணிக்கு அவர் தான் கேப்டன். அவரது தலைமையிலான அந்த அணியில் இந்திய அணியின் ஜாம்பவான்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரையும் தேர்வு செய்தார். இதில் ஆச்சரியம் எதுவுமில்லை. 

விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக இளம் வீரர் ரிஷப் பண்ட்டை தேர்வு செய்தார். இந்த அணியில் பும்ராவை தேர்வு செய்யவில்லை என்றால் தான் ஆச்சரியம். எனவே அவரும் இருக்கிறார். உள்நாட்டு இளம் வீரரான ரியான் பராக்கையும் கங்குலி தனது அணியில் தேர்வு செய்தார். அதேபோல ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் இந்த அணியில் இருக்கிறார். ரோஹித், கோலி, ரிஷப், பும்ரா, ஜடேஜா ஆகியோர் இந்திய வீரர்கள். தோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோரை கங்குலி தேர்வு செய்யவில்லை. 

வெளிநாட்டு வீரர்களாக டேவிட் வார்னர், ஆண்ட்ரே ரசல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய நால்வரையும் தேர்வு செய்தார். 

கங்குலி தேர்வு செய்த அவரது தலைமையிலான அணி:

கங்குலி(கேப்டன்), ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், ரியான் பராக், ஜடேஜா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், பும்ரா, ஜோஃப்ரா ஆர்ச்சர். 
 

click me!