நீ கவலைப்படாத கோலி.. நான் உன்கூட இருக்கேன்.. கேப்டனை உற்சாகப்படுத்தி நெகிழவைத்த ரோஹித்

By karthikeyan VFirst Published May 24, 2019, 5:13 PM IST
Highlights

உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு நம்பிக்கை வார்த்தைகளை கூறி உற்சாகப்படுத்தியுள்ளார் துணை கேப்டன் ரோஹித் சர்மா. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். அதிலும் உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பதால் இங்கிலாந்து அணி வெல்வதற்கான வாய்ப்புதான் சற்று அதிகமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. 

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளும் சிறப்பாக உள்ளன. ஆனாலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணிகளாக கருதப்படுகின்றன. முன்னெப்போதையும் விட இந்திய அணி மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்றிருப்பது கூடுதல் பலம். 

அதுமட்டுமல்லாமல் மற்ற அணிகளில் ஒரு கேப்டன் இருப்பார். அதுபோக ஆட்டத்தின் மீதான அபாரமான புரிதலுடன் கேப்டன்சி திறனுடைய அனுபவ வீரர் ஒருவர் இருப்பார். ஆனால் இந்திய அணியில் மட்டும் நிறைய கேப்டன்கள் உள்ளனர். கோலியின் கேப்டன்சியில் குறைபாடுகள் இருந்தாலும், அவர் இக்கட்டான சூழல்களில் எல்லாம் ரோஹித் மற்றும் தோனியின் ஆலோசனைகளை கேட்டுத்தான் செயல்படுகிறார் என்பதால் பிரச்னையில்லை. 

தோனியிடம் இருந்த அபாரமான கேப்டன்சி திறனும் சிறந்த தலைமைத்துவ பண்பும் ரோஹித்திடமும் உள்ளது. தோனி ஒரு கேப்டனாக இந்திய அணிக்கு ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்து முக்கிய பங்காற்றியுள்ளார். ரோஹித் சர்மா கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். ஆசிய கோப்பையில் இந்திய அணியை வழிநடத்தி அந்த கோப்பையை வென்று கொடுத்தார். எனவே இந்திய அணியில் தோனி, கோலி, ரோஹித் என 3 கேப்டன்கள் உள்ளனர். 

முக்கியமான முடிவுகளை எல்லாம் தோனி மற்றும் ரோஹித்துடன் ஆலோசித்துத்தான் எடுப்பதாகவும் அவர்களை பெற்றிருப்பதற்கு பெருமையும் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், உலக கோப்பை குறித்து பேசிய ரோஹித் சர்மா, கேப்டன் விராட் கோலி சிறந்த அணியை பெற்றுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக ஒரு கேப்டனாக அவரது பணியை செவ்வனே செய்துள்ளார். கேப்டன் கோலிக்கு களத்தில் எந்த சூழலில் என் உதவி தேவைப்பட்டாலும் அதை செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

கோலியின் கேப்டன்சி விமர்சனம் செய்யப்படும் நிலையில், ரோஹித்தின் கேப்டன்சி புகழப்படுகிறது. அடுத்த கேப்டன் ரோஹித்தான் என்றளவுக்கு பேசப்படுகிறது. இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே பனிப்போர் நடந்துவருவதாக தோற்றம் உள்ளது. இந்நிலையில், அணியின் ஸ்பிரிட்டை காட்டும்விதமாக ரோஹித், கேப்டன் கோலிக்கு எந்த சூழலிலும் தான் உறுதியாக இருப்பேன் என்று உறுதியளித்துள்ளார். 
 

click me!