
டி20 உலக கோப்பையுடன் விராட் கோலி இந்திய அணியின் கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய 3 அணிகளின் கேப்டன்சியும் ரோஹித்திடம் ஒப்படைக்கப்பட்டது.
ரோஹித் முழு நேர கேப்டனான பிறகு ஆடிய முதல் டி20 தொடரான நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதன்பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் ரோஹித் காயம் காரணமாக ஆடவில்லை.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ரோஹித் சர்மா கம்பேக் கொடுத்தார். ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரண்டு தொடர்களிலும் வெஸ்ட் இண்டீஸை 3-0 என ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி வென்றது.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3-0 என ஒயிட்வாஷ் செய்து இந்தியா தொடரை வென்றது. இந்த தொடரில் வெற்றி பெற்றதையடுத்து 269 புள்ளிகளுடன் ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை பிடித்தது.
6 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஐசிசி டி20 தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. கடைசியாக 2016ம் ஆண்டு தோனியின் கேப்டன்சியில் இந்திய அணி ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தது. அதன்பின்னர் 2017ம் ஆண்டு கோலி கேப்டன்சியை ஏற்றார். கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்ததே இல்லை. ரோஹித் சர்மா கேப்டன்சியை ஏற்றதுமே, நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அடுத்தடுத்த 2 டி20 தொடர்களை வென்று டி20 தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.
இந்திய அணி இதுவரை, இருதரப்பு டி20 தொடர்களில் எதிரணியை 6 முறை ஒயிட்வாஷ் செய்துள்ளது. அதில் 4 முறை ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் என்பது ரோஹித் படைத்திருக்கும் மற்றொரு சாதனை.