கேதர் ஜாதவிற்கு பதில் அவர கூட்டிட்டு போங்க.. எதிரணிகளை சும்மா தெறிக்கவிட்ருவாப்ள!! உலக கோப்பையை வென்ற முன்னாள் வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published May 16, 2019, 5:08 PM IST
Highlights

உலக கோப்பையில் கேதர் ஜாதவ் ஆடமுடியவில்லை என்றால் அவருக்கு பதிலாக யாரை சேர்க்கலாம் என்று உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் ஆடிய வீரர் கருத்து தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு, தீவிரமாக தயாராகிவருகின்றன. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். அதிலும் உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பதால் இங்கிலாந்து அணி வெல்வதற்கான வாய்ப்புதான் சற்று அதிகமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. 

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளும் சிறப்பாக உள்ளன. ஆனாலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணிகளாக கருதப்படுகின்றன.

இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கேதர் ஜாதவிற்கு, ஐபிஎல்லில் அடிபட்டதால் அவர் இங்கிலாந்துக்கு செல்வது இன்னும் உறுதியாகவில்லை. கேதர் ஜாதவ் மிடில் ஆர்டரின் முக்கியமான பேட்ஸ்மேன் மட்டுமல்லாது தேவைப்படும்போது பவுலிங் போட்டு விக்கெட்டையும் வீழ்த்தக்கூடியவர். எனவே ஒருவேளை அவர் ஆடமுடியாமல் போனால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு.

இந்நிலையில், இந்திய அணி வரும் 22ம் தேதி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. அதற்குள் கேதர் ஜாதவ் முழு உடற்தகுதி பெறுவாரா என்பது தெரியவில்லை. ஒருவேளை கேதர் உலக கோப்பையில் ஆடமுடியாமல் போனால், அவருக்கு பதிலாக ராயுடு அல்லது அக்ஸர் படேல் அணியில் எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

ஆனால் கேதர் ஜாதவ் உலக கோப்பையில் ஆடமுடியவில்லை என்றால் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் தான் அணியில் எடுக்கப்பட வேண்டும் என முன்னாள் வீரர் ரோஜர் பின்னி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ரோஜர் பின்னி, உலக கோப்பையை வெல்ல வீரர்கள் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டிய அவசியம். 

கேதர் ஜாதவ் இன்னும் முழு உடற்தகுதி பெறவில்லை என்பது தெரிகிறது. ஒருவேளை கேதர் ஜாதவ் உலக கோப்பைக்கு செல்ல முடியாத பட்சத்தில் ரிஷப் பண்ட்டை அவருக்கு பதிலாக எடுக்க வேண்டும். எதிரணிகளின் பவுலிங்கை தெறிக்கவிட்டு இந்திய அணியை வெற்றி பெற செய்வார். எனவே அவரைத்தான் கேதருக்கு பதிலாக அணியில் எடுக்க வேண்டும் என்று ரோஜர் பின்னி கருத்து தெரிவித்துள்ளார். 
 

click me!