
India vs England Test Rishabh Pant Expressed Anger At Ehe Umpire: இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்பு தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், இன்று 3வது நாளில் இங்கிலாந்து அணி தொடர்ந்து பேட்டிங் செய்த நிலையில், அந்த அணி வீரர் ஆலி போப் 106 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழந்து 327 ரன்கள்
அடுத்து களம் புகுந்த பென் ஸ்டோக்ஸ் 20 ரன்னில் முகமது சிராஜ் பந்தில் நடையை கட்டினார். ஆனால் மறுபக்கம் இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் சூப்பர் அரை சதம் விளாசினார். 3ம் நாள் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்துள்ளது. ஹாரி ப்ரூக் 77 பந்துகளில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 57 ரன்களுடனும், ஜேமி ஸ்மித் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
புதிய பந்து கேட்ட இந்திய அணி
இந்நிலையில், இன்றைய 3ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட் நடுவரிடம் கோபமடைந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது இங்கிலாந்து வீரர்கள் ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, ''பந்து சிறிது சேதமடைந்து விட்டது புதிய பந்தை கொடுங்கள்'' என்று கள நடுவர் பால் ரீஃபலிடம் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், பும்ரா ஆகியோர் வலியுறுத்தினார்கள்.
நடுவரிடம் கோபத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட்
ஆகையால் பந்தை வாங்கி பார்த்த நடுவர், 'பந்து நன்றாக உள்ளது. புதிய பந்து வாங்குவதற்கான நேரம் இன்னும் வரவில்லை' என்று தெரிவித்தார். அப்போது ரிஷப் பண்ட் நடுவர் பால் ரீஃபலிடம் சென்று பந்தை மாற்றித் தரும்படி கேட்டார். அதற்கு நடுவர் 'பந்து நன்றாக உள்ளதால் இப்போது மாற்ற வேண்டிய அவசியம் இல்லை' என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த ரிஷப் பண்ட் நடுவரிடம் கோபத்தை வெளிக்காட்டும் விதமாக தான் கையில் வைத்திருந்த பந்தை அவரிடம் கொடுக்காமல் தூக்கி எறிந்து விட்டு சென்றார்.
பண்ட்டுக்கு எதிராக ரசிகர்கள் கூச்சல்
அவரிடம் செயலைக் கண்ட நடுவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் ரிஷப் பண்ட்டின் செய்கையால் கோபமடைந்த ரசிகர்கள் அவருக்கு எதிராக மைதானத்தில் கூச்சலிட்டனர். பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து பழையாதாகி விட்டாலோ அல்லது சேதம் அடைந்து விட்டாலோ கள நடுவர் அதை மாற்றி புதிய பந்தை வழங்குவார். ஆனால் இந்திய அணி கேட்டபோது பந்து நல்ல நிலையில் இருந்ததால் புதிய பந்து வழங்க நடுவர் மறுத்தார். ஆனால் அதன்பிறகு சிறிது நேரம் கழித்து உணவு இடைவேளைக்கு முன்பு இந்திய அணிக்கு புதிய பந்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.