
Rishabh Pant Create Many Records First Test Against England: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்திய அணி வீரர் ரிஷப் சூப்பர் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். முதல் இன்னிங்ஸிலும் அதிரடி சதம் (134 ரன்கள்) அடித்து இந்திய அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீட்ட ரிஷப் பண்ட் இப்போது இரண்டாவது இன்னிங்சிலும் அதிரடி சதம் ( 15 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 140 பந்தில் 118 ரன்கள்) விளாசி அசத்தியுள்ளார்.
ரிஷப் பண்ட் 2வது சதம்
இந்த ஆட்டத்தில் அரை சதம் அடிக்கும் வரை அணியின் சூழ்நிலை கருதி பொறுமையாக விளையாடிய பண்ட், பின்பு அதிரடியாக ஆடி இந்திய அணியை வலுவான நிலைக்கு கொன்டு சென்றார். இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்ததன் மூலம் ரிஷப் பண்ட் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அதாவது டெஸ் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பண்ட் பெற்றுள்ளார்.
ஜிம்பாப்வே வீரர் ஆண்டி ஃப்ளவருடன் இணைந்தார்
ஜிம்பாப்வே வீரர் ஆண்டி ஃப்ளவர் (தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 142 & 199*, ஹராரே 2001) ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்திருந்தார். இப்போது அவருடன் சாதனை பட்டியலில் ரிஷப் பண்ட்டும் இணைந்துள்ளார். இங்கிலாந்திற்கு எதிரான ஒரே போட்டியில் இரட்டை சதம் அடித்த வரலாற்றில் முதல் இந்திய வீரர் பண்ட் ஆவார். வாரன் பார்ட்ஸ்லி, கோலின் கிரீனிட்ஜ், ஜார்ஜ் ஹெட்லி, ஷாய் ஹோப், ஆலன் மெல்வில், புரூஸ் மிட்செல், ஸ்டீவ் ஸ்மித், ஸ்டீவ் வாஹ் ஆகியோருக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் அரிய சாதனையை எட்டிய முதல் ஆசிய வீரர் பண்ட் ஆவார்.
சச்சின் சாதனை சமன்
ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், விஜய் ஹசாரே, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்குப் பிறகு ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு சதங்களை இரட்டை சதம் அடித்த ஏழாவது இந்திய வீரர் (10வது முறை) ரிஷப் பண்ட் ஆவார். கவாஸ்கர் மற்றும் டிராவிட் ஆகியோர் இரண்டு முறை இந்த சாதனையை படைத்துள்ளனர்.
இங்கிலாந்தில் அதிக ரன்கள் எடுத்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர்
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்தில் அதிக ரன்கள் எடுத்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் பண்ட் இப்போது வைத்திருக்கிறார். இந்த சாதனையை முன்னர் எம்.எஸ். தோனி வைத்திருந்தார். இது தவிர இங்கிலாந்தில் பல சதங்கள் அடித்த ஒரே வெளிநாட்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற அரிய சாதனையையும் பண்ட் படைத்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் மட்டும் பண்ட் நான்கு சதங்கள் விளாசியுள்ளார்.
தோனியின் சாதனையும் முறியடிப்பு
ஏற்கெனவே ஓவல், பர்மிங்காமில் சதம் அடித்திருந்த அவர் இப்போது லீட்ஸில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். இங்கிலாந்தில் ராகுல் டிராவிட் 6 சதங்கள் விளாசியுள்ளார். திலீப் வெங்சர்க்கார் மற்றும் சச்சின் டெண்டுல்கர் 4 சதங்கள் விளாசியுள்ளனர். இப்பொது பண்ட் அவர்களுடன் இணைந்துள்ளார். இந்த சதத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் ரிஷப் பண்ட் படைத்துள்ளார். அதாவது ரிஷப் பண்ட் இதுவரை 8 சதங்கள் விளாசியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி 6 சதங்கள் அடித்திருந்த நிலையில், ரிஷப் பண்ட் தோனியின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்துள்ளார்.