அடுத்தடுத்து சதம் விளாசிய கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட்! புதிய ரிக்கார்ட் படைத்த இந்திய அணி!

Published : Jun 23, 2025, 08:14 PM IST
Rishabh Pant and KL Rahul

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் சதம் அடித்து சாதனை படைத்துள்ளனர். இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.

Rishabh Pant, KL Rahul Set A Record By Scoring Centuries In England Test: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் சூப்பர் சதம் விளாசி அசத்தியுள்ளார். இன்றைய 4ம் நாள் ஆட்டம் தொடங்கியவுடன் சுப்மன் கில் விரைவில் அவுட் ஆன நிலையில், கே.எல்.ராகுல் மிக பொறுமையுடன், கவனமாக விளையாடி 202 பந்துகளில் தனது சதத்தை அடித்தார். இது கே.எல்.ராகுலில் 9வது டெஸ்ட் சதமாகும்.

கே.எல்.ராகுல் சூப்பர் சதம்

மேலும் இங்கிலாந்து மண்ணில் இது அவரது 3வது சதமாகும். இங்கிலாந்தில் ஏற்கெனவே ஓவல் மற்றும் லார்ட்ஸில் சதம் அடித்திருந்த அவர் இப்போது லீட்ஸிலும் மிக முக்கியமான சதம் அடித்து இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணியை காப்பாற்றி வரும் கே.எல்.ராகுல் கடந்த 4 மாதங்களில் மட்டும் 50 ஓவர் சாம்பியன்ஸ் கிரிக்கெட், 20 ஓவர் ஐபிஎல் மற்றும் இப்போது டெஸ்ட் என 3 பார்மட்டிலும் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

ரிஷப் பண்ட்டும் அதிரடி சதம்

இதேபோல் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் இந்த இன்னிங்சில் சதம் விளாசியுள்ளார். முதல் இன்னிங்ஸிலும் அதிரடி சதம் (134 ரன்கள்) அடித்த அவர் இந்த இன்னிங்சிலும் வெறும் 130 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். ரிஷப் பண்ட் மொத்தம் 15 பவுண்டரிகளையும், 3 சிக்சர்களையும் நொறுக்கியுள்ளார். தொடர்ந்து ரிஷப் பண்ட் 140 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

தொடக்கத்தில் சுப்மன் கில் அவுட்

முன்னதாக இந்த டெஸ்ட்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்பு தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்று 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழந்து 90 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 75 பந்தில் 7 பவுண்டரிகளுடன் 47 ரன்களுடனும், கேப்டன் சுப்மன் கில் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

அணியை மீட்டெடுத்த ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல்

இந்நிலையில், இன்று 4ம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், முதல் இன்னிங்சில் சதம் விளாசிய கேப்டன் சுப்மன் கில் வெறும் 8 ரன்களுக்கு கார்ஸ் பந்தில் போல்டானார். இதனால் இந்திய அணி 92/3 என பரிதவித்தது. பின்பு ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட்டும், கே.எல்.ராகுலும் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்டெம்புக்கு உள்ளே வந்த பந்துகளை மட்டும் தடுத்து ஆடிய கே.எல்.ராகுல் வெளியே சென்ற பந்துகளை தொடவே இல்லை.

தொடர்ந்து 2 சிக்சர்கள்

மிக நிதானமாக ஆடிய அவர் அரைசதம் அடித்தார். இதேபோல் மறுபக்கம் ரிஷப் பண்ட்டும் வழக்கத்துக்கு மாறாக பொறுமையுடன் ஆடினார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தது. பொறுமையாக விளையாடிக் கொண்டிருந்த ரிஷப் உணவு இடைவேளைக்கு பின்பு அரை சதம் அடித்ததும் அதிரடியை கையில் எடுத்தார். சோயிப் பஷிரின் ஓவரில் இரண்டு சிக்சர்களை பறக்க விட்ட அவர் கார்ஸ் பந்திலும் பவுண்டரிகளாக ஓடவிட்டார்.

இந்திய அணி வலுவான நிலை

மறுமுனையில் கே.எல்.ராகுலும் வேகமாக விளையாட ஆரம்பித்தார். சூப்பர் கவர் டிரைவ் மூலம் பவுண்டரிகளாக விரட்டியடித்தார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அவர் உள்பட அனைத்து பவுலர்களை மாற்றி மாற்றிப் பார்த்தும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் சூப்பர் சதம் விளாசினார். ரிஷப் பண்ட்டும் சதம அடித்து அவுட்டானர். இப்போது வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 15 பவுண்டரிகளுடன் 117 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஒரே டெஸ்ட்டில் ரிஷப் பண்ட் 2 சதம், கே.எல்.ராகுல் 1, சுப்மன் கில் 1, ஜெய்ஸ்வால் 1 என 5 சதங்கள் அடித்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரேலியாவில் முதல் சதம் விளாசிய 'ரன் மெஷின்' ஜோ ரூட்! ஆஷஸ் டெஸ்ட்டில் அசத்தல்!
IND vs SA 3வது ஓடிஐ..இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. தமிழக வீரர் நீக்கம்.. பிளேயிங் லெவன் இதோ!