#INDvsENG ரிஷப் பண்ட் அதிரடி சதம்.. வாஷிங்டன் சுந்தர் பொறுப்பான அரைசதம்..! வலுவான முன்னிலையை நோக்கி இந்தியா

By karthikeyan VFirst Published Mar 5, 2021, 5:36 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ரிஷப் பண்ட்டின் அதிரடி சதம் மற்றும் வாஷிங்டன் சுந்தரின் பொறுப்பான அரைசதத்தின் மூலம் வலுவான முன்னிலையை நோக்கி நகர்கிறது இந்திய அணி.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி சார்பில் அக்ஸர் படேல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 55 ரன்கள் அடித்தார். லாரன்ஸ் 46 ரன்கள் அடித்தார். மற்ற யாரும் சொல்லும்படியாக ஆடவில்லை.

இதையடுத்து முதல் நாள் ஆட்டத்தின் 3வது செசனிலேயே முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகிவிட்டார். இதையடுத்து ரோஹித்தும் புஜாராவும் களத்தில் இருந்த நிலையில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் அடித்திருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது.

2ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசனிலேயே புஜாரா(17), கோலி(0), ரஹானே(27) ஆகியோர் ஆட்டமிழக்க, ஓரளவிற்கு தாக்குப்பிடித்து ஆடிய ரோஹித் சர்மாவும் 49 ரன்னில் ஸ்டோக்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். அஷ்வினும் 13 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதனால் இந்திய அணி 146 ரன்களுக்கே 6 விக்கெட்டை இழந்துவிட்டது.

அதன்பின்னர் ரிஷப் பண்ட்டுடன் ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் ஒத்துழைப்பு கொடுத்து ஆட, ரிஷப் பண்ட் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை ஆடி பவுண்டரிகளாக விளாசி சதமடித்தார். 118 பந்தில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 101 ரன்களை குவித்து ஆண்டர்சனின் பந்தில் ஆட்டமிழந்தார். தடுப்பாட்டம் ஆடி விக்கெட்டை வீணாக பறிகொடுக்காமல், அடித்து ஆடி மளமளவென ஸ்கோரை உயர்த்தி இந்திய அணியை முன்னிலை பெறவைத்துவிட்டு ஆட்டமிழந்தார் பண்ட். ரிஷப் பண்ட் ஆட்டமிழக்கும்போது இந்திய அணியின் ஸ்கோர் 259. 

7வது விக்கெட்டாக ரிஷப் பண்ட் ஆட்டமிழக்க, வாஷிங்டன் சுந்தருடன் அக்ஸர் படேல் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய சுந்தர் அரைசதம் அடித்தார். 2ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி  294 ரன்கள் அடித்துள்ளது. இதன்மூலம் 89 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி. இன்னும் 3 விக்கெட்டுகள் எஞ்சியுள்ள நிலையில், நன்றாக செட்டில் ஆகிவிட்ட சுந்தரும் நன்றாக பேட்டிங் ஆட தெரிந்த அக்ஸர் படேலும் இணைந்து பெரிய ஸ்கோர் அடிக்கும்பட்சத்தில் முன்னிலை வலுவாக இருக்கும்.

2ம் நாள் ஆட்ட முடிவில் சுந்தர் 60 ரன்களுடனும் அக்ஸர் படேல் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
 

click me!