ரைலீ ரூசோ அதிரடி சதம்; சிறிய மைதானத்தில் அடி வெளுத்துவாங்கிய தென்னாப்பிரிக்க வீரர்கள்!இந்தியாவிற்கு கடினஇலக்கு

By karthikeyan VFirst Published Oct 4, 2022, 9:01 PM IST
Highlights

இந்தியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் ரைலீ ரூசோ அதிரடி சதத்தால் 20 ஓவரில் 227 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்க அணி, 228 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி முதல் முறையாக இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்று சாதனை படைத்தது.

இந்நிலையில், இன்று இந்தூரில் நடந்துவரும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. கேஎல் ராகுல், விராட் கோலி, அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவருக்கும் ஓய்வளிக்கப்பட்டு ஷ்ரேயாஸ் ஐயர், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டனர்.

இதையும் படிங்க - ஜடேஜா, பும்ராவை தொடர்ந்து மற்றொரு முக்கிய வீரரும் காயம்! டாஸோடு சேர்த்து பெரிய குண்டையும் தூக்கிப்போட்ட ரோஹித்

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், உமேஷ் யாதவ், முகமது சிராஜ். 
 
தென்னாப்பிரிக்க அணி:

டெம்பா பவுமா (கேப்டன்), டி காக் (விக்கெட் கீப்பர்), ரைலீ ரூசோ, எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், வெய்ன் பர்னெல், ட்வைன் பிரிட்டோரியஸ், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி.

முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான டெம்பா பவுமா மீண்டும் சொதப்பினார். வெறும் 3 ரன்னில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். இந்தூர் மைதானம் மிகச்சிறியது. அதைப்பயன்படுத்தி டி காக் மற்றும் ரைலீ ரூசோ ஆகிய இருவரும் அடித்து ஆடினர். இந்திய பவுலிங்கை பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அடித்து நொறுக்கினார். 

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த குயிண்டன் டி காக் 43 பந்தில் 68 ரன்களை குவித்து ரன் அவுட்டாகி வெளியேறினார். டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் இந்தூரில் சிக்ஸர் மழை பொழிந்த ரைலீ ரூசோ 48 பந்தில் சதமடித்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 48 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 100 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார் ரூசோ.

இதையும் படிங்க - மீண்டும் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக களமிறங்கும் டிவில்லியர்ஸ்..! ரசிகர்கள் செம குஷி

டேவிட் மில்லர் கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் விளாசி முரட்டுத்தனமாக முடித்து கொடுக்க, 20 ஓவரில் 227 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்க அணி 228 ரன்கள் என்ற கடின இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!