
2014ம் ஆண்டிலிருந்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்துவந்த விராட் கோலி, கடைசியாக நடந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார்.
விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பல அபாரமான சாதனைகளை படைத்துள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்திய அணி கோலியின் தலைமையில் டெஸ்ட் தொடரை வென்றது. இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என உலக முழுதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகளை குவித்து ஆதிக்கம் செலுத்தியது இந்திய அணி.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரை சென்ற இந்திய அணி ஃபைனலில் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி வெற்றிநடை போட்டது.
விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனியை ஏற்றபோது ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 7ம் இடத்தில் இருந்தது இந்திய அணி. அதன்பின்னர் இந்திய அணியை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி, டெஸ்ட்டில் நம்பர் 1 இடத்திற்கு கொண்டுவந்த விராட் கோலி, அவரது கேப்டன்சியில் நீண்டகாலம் நம்பர் 1 இடத்தை தக்கவைத்தார்.
விராட் கோலியின் கேப்டன்சியில் 68 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய இந்திய அணி 40 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்தியாவில் ஆடிய 31 டெஸ்ட் போட்டிகளில் கோலியின் கேப்டன்சியில் இரண்டே இரண்டு தோல்விகள் மட்டுமே. கோலியின் கேப்டன்சியில் வெளிநாடுகளில் ஆடிய 36 டெஸ்ட் போட்டிகளில் 16 வெற்றிகளை பெற்றது இந்திய அணி. வெளிநாட்டில் வெற்றி சதவிகிதம் 44.44 ஆகும். இதுவே வெளிநாட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசிய கேப்டனின் அதிகபட்ச வெற்றி விகிதம். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் வெற்றி விகிதம் 58.82 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றி விகிதம் கொண்ட கேப்டன்கள் பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளார். ஸ்டீவ் வாக், டான் பிராட்மேன், ரிக்கி பாண்டிங் ஆகிய மூவருக்கு அடுத்த 4ம் இடத்தில் உள்ளார் விராட் கோலி.
இந்நிலையில், விராட் கோலி திடீரென டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகிய நிலையில், அவர் டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகியது பெரும் அதிர்ச்சியளித்ததாக தெரிவித்திருந்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், கோலியை வெகுவாக புகழவும் செய்துள்ளார்.
கோலி கேப்டன்சி குறித்து பேசிய ரிக்கி பாண்டிங், எனது கேப்டன்சியில் ஆஸ்திரேலிய அணி செய்த சாதனைகளை விட பெரிய சாதனை கோலியின் கேப்டன்சியில் இந்தியா செய்ததுதான். நான் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்றபோது, ஆஸ்திரேலிய அணி சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வெற்றிகளை குவித்து கொண்டிருந்தது. ஆனால் விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சியை ஏற்றபோது, இந்திய அணி வெளிநாடுகளில் வெற்றிகளை பெற முடியாமல் தவித்துவந்தது. கோலி கேப்டனான பிறகு, வெளிநாடுகளில் இந்திய அணி வெற்றிகளை குவித்தது. அதை நினைத்து கோலியும் இந்திய அணியும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். விராட்கோலி டெஸ்ட் கேப்டனாக படைத்திருக்கும் சாதனைகளுக்கு, அவர் கேப்டன்சியிலிருந்து மிக மிகப்பெருமையுடன் விலகலாம் என்று ரிக்கி பாண்டிங் புகழாரம் சூட்டியுள்ளார்.