
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் ஒருநாள் தொடரும் அதைத்தொடர்ந்து டி20 தொடரும் நடக்கவுள்ளது.
வரும் பிப்ரவரி 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்திலும், பிபவரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும் நடக்கவுள்ளன.
இந்த தொடருக்கான இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்த தொடரில் ரோஹித் சர்மா அணியில் மீண்டும் இணைவதால், அவரது கேப்டன்சியில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. எனவே இந்த தொடர் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போட்டிகளை நடத்துவதே பெரும் சவால். ஆனால் டி20 போட்டிகளை காண 75 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதியளித்துள்ளது மேற்கு வங்க மாநில அரசு.
எனவே கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டிகளை ரசிகர்கள் நேரில் பார்க்கமுடியும். ரோஹித் சர்மாவுக்கு மிகவும் பிடித்தமான மைதானம் ஈடன் கார்டன். ஈடன் கார்டனில் தான் அவர் பெரிய பெரிய இன்னிங்ஸ்களை ஆடி பெரிய ஸ்கோர் செய்திருக்கிறார். எனவே ஈடன் கார்டனில் ரோஹித் கண்டிப்பாக பெரிய ஸ்கோர் செய்வார் என்று எதிர்பார்க்கலாம். அந்தவகையில், ஈடன் கார்டனில் போட்டிகளை நேரில் காண்பது ரசிகர்களுக்கு செம குஷியான செய்தி.