பத்தாண்டின் சிறந்த டெஸ்ட் அணி.. லெஜண்ட் பாண்டிங்கின் தேர்வு

By karthikeyan VFirst Published Dec 30, 2019, 2:37 PM IST
Highlights

கடந்த பத்தாண்டில் கோலோச்சிய 11 வீரர்களை கொண்ட சிறந்த டெஸ்ட் அணியை ரிக்கி பாண்டிங் தேர்வு செய்துள்ளார். 
 

கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஏற்கனவே கடந்த பத்தாண்டில் சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளை தேர்வு செய்து அறிவித்திருந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் லெஜண்ட் பேட்ஸ்மேனும் வெற்றிகரமான கேப்டனுமான ரிக்கி பாண்டிங், பத்தாண்டின் சிறந்த அணியை தேர்வு செய்துள்ளார். 

கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்த அதே டாப் 5 வீரர்களைத்தான் பாண்டிங்கும் தேர்வு செய்துள்ளார். பத்தாண்டின் சிறந்த டெஸ்ட் தொடக்க வீரர்களாக இங்கிலாந்தின் அலெஸ்டர் குக் மற்றும் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகிய இருவரையும் பாண்டிங் தேர்வு செய்துள்ளார். மூன்றாம் வரிசையில் கேன் வில்லியம்சனையும் நான்காம் வரிசைக்கு ஸ்டீவ் ஸ்மித்தையும் தேர்வு செய்துள்ள பாண்டிங், ஐந்தாம் வரிசை வீரராக கோலியை தேர்வு செய்து அவரையே கேப்டனாகவும் நியமித்துள்ளார். 

விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி, இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் டெஸ்ட் வெற்றிகளை குவித்துவருகிறது. ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக இந்திய அணி டெஸ்ட் தொடரை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வென்றது. கோலியின் தலைமையில் இந்திய அணி இந்த வரலாற்று சாதனையை படைத்தது. 

கோலி தலைமையில் இந்திய அணி 33 டெஸ்ட் வெற்றிகளை பெற்றுள்ளது. இதன்மூலம் இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான வெற்றிகளை குவித்து கொடுத்த வெற்றிகரமான கேப்டனாக கோலி திகழ்கிறார். அதுமட்டுமல்லாமல், நடந்துவரும் அறிமுக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இதுவரை ஆடிய ஒரு போட்டியில் கூட தோற்காமல் 360 புள்ளிகளை பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது இந்திய அணி. கோலியின் தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலோச்சுகிறது. 

அந்தவகையில், பத்தாண்டின் சிறந்த டெஸ்ட் அணிக்கு கோலியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார் பாண்டிங். கோலியைத்தான் பத்தாண்டின் சிறந்த டெஸ்ட் அணிக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் கேப்டனாக தேர்வு செய்திருந்தது. 

விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக இலங்கையின் முன்னாள் கேப்டனும் சிறந்த வீரருமான குமார் சங்கக்கராவை தேர்வு செய்துள்ள பாண்டிங், ஆல்ரவுண்டராக பென் ஸ்டோக்ஸையும், ஃபாஸ்ட் பவுலர்களாக டேல் ஸ்டெய்ன், ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார். ஸ்பின் பவுலராக ஆஸ்திரேலியாவின் நாதன் லயனை தேர்வு செய்துள்ளார். 

பாண்டிங் தேர்வு செய்த பத்தாண்டின் சிறந்த டெஸ்ட் அணி:

அலெஸ்டர் குக், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி(கேப்டன்), குமார் சங்கக்கரா(விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், நாதன் லயன், டேல் ஸ்டெய்ன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன். 
 

click me!