ஆஸ்திரேலியாவில் இவ்வளவு மட்டமா ஒரு டீம் ஆடி நான் பார்த்ததே இல்ல.. இங்கிலாந்தை கடுமையாக விமர்சித்த பாண்டிங்

By karthikeyan VFirst Published Dec 30, 2021, 10:17 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி ஆடுவதை போல ஆஸ்திரேலியாவில் இந்தளவிற்கு மட்டமாக ஒரு அணி ஆடியதைத் தான் பார்த்ததே இல்லை என்று ரிக்கி பாண்டிங் விமர்சித்துள்ளார்.
 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. பொதுவாக, ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளுமே உலக கோப்பைக்கு நிகராக மதித்து ஆஷஸ் தொடரை வெல்வதற்காக கடுமையாக போராடும். ஆஷஸ் தொடர் மிகவும் விறுவிறுப்பானதாகவும், பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாத த்ரில்லான போட்டிகளாக அமையும்.

ஆனால் இந்த ஆஷஸ் தொடர் அப்படியானதாக இல்லை. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி தான் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்துகிறது. இங்கிலாந்து அணி இதுவரை இல்லாத அளவிற்கு ஆஷஸில் படுமட்டமாக விளையாடிவருகிறது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே படுமோசமாக செயல்பட்டு படுதோல்விகளை அடைந்துவருகிறது.

பிரிஸ்பேன் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணி, மெல்போர்னில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியிலும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி முதல் இன்னிங்ஸில் வெறும் 185 ரன்கள் அடித்தது இங்கிலாந்து அணி. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 267 ரன்கள் அடித்தது. 82 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, வெறும் 68 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததுடன், தொடரையும் இழந்தது.

மெல்போர்னில் நடந்த 3வது டெஸ்ட் போட்டி 3ம் நாள் ஆட்டத்தின் முதல் செசனிலேயே முடிந்தது. அந்தளவிற்கு படுமட்டமாக ஆடியது இங்கிலாந்து அணி. 

இந்நிலையில், இங்கிலாந்தின் ஆட்டம் குறித்து பேசியுள்ள ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து அணி இப்போது ஆடுமளவிற்கு மட்டமாக, வேறு ஒரு அணி ஆடியதை நான் பார்த்ததேயில்லை. இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிலர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுமளவிற்கான வீரர்களே இல்லை. சவாலான கண்டிஷன்களில் உலகத்தரம் வாய்ந்த சிறந்த பவுலர்களை எதிர்கொண்டு ஆடுமளவிற்கான டெக்னிக்கை கொண்ட பேட்ஸ்மேன்களாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இல்லை என்று பாண்டிங் கூறியுள்ளார்.
 

click me!