IPL 2022 ஆர்சிபி அணி 2 பெரிய வீரர்களை தக்கவைப்பது உறுதி! எஞ்சிய 2 இடத்திற்கு 4 வீரர்களுக்கு இடையே கடும் போட்டி

By karthikeyan VFirst Published Nov 28, 2021, 4:01 PM IST
Highlights

ஐபிஎல் 15வது சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளதால் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற நிலையில், ஆர்சிபி அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கிறது என்று பார்ப்போம்.
 

ஐபிஎல்லில் இதுவரை 8 அணிகள் ஆடிவந்த நிலையில், அடுத்த சீசனிலிருந்து கூடுதலாக 2 அணிகள் சேர்வதால் மொத்தம் 10 அணிகள் ஆடவுள்ளன. லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக களமிறங்குகின்றன.

அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. எனவே ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்றவர்களை விடுவிக்க வேண்டும். 2 புதிய அணிகளும், ஏலத்திற்கு முன்பாக தலா 3 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம்.

ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க வரும் 30ம் தேதியே கடைசி நாள். எனவே ஒவ்வொரு அணியும் எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், டேவிட் வார்னர், ஷிகர் தவான், மயன்க் அகர்வால் ஆகிய வீரர்கள் அவர்கள் சார்ந்த அணிகளால் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஐபிஎல் ஏலம் பரபரப்பாக இருக்கும்.

இதற்கிடையே, எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளிவரும் நிலையில், முன்னாள் வீரர்கள் பலரும் இதுகுறித்து கருத்து கூறிவருகின்றனர். 

இந்நிலையில், ஆர்சிபி அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கிறது என்பது குறித்து பார்ப்போம். ஆர்சிபி அணியின் மாபெரும் தூணாகவும், மேட்ச் வின்னராகவும் திகழ்ந்த டிவில்லியர்ஸ், ஐபிஎல் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்துவிட்டார். அதனால் அவரைப்பற்றி யோசிக்க தேவையில்லை.

ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகிவிட்டாலும், ஐபிஎல்லில் ஆடும்வரை ஆர்சிபி அணிக்காக மட்டுமே ஆடப்போவதாக கூறிவிட்டார். எனவே விராட் கோலியை ஆர்சிபி அணி கண்டிப்பாக தக்கவைக்கும். 

ஒவ்வொரு அணியும் ஐபிஎல் ஏலத்தில் ரூ.90 கோடி செலவு செய்யலாம். 4 வீரர்களை தக்கவைப்பதென்றால், அதற்கு அதிகபட்சமாக ரூ.42 கோடியை ஒதுக்க வேண்டும். ஒரு அணி தக்கவைக்கும் முதல் வீரருக்கு ரூ.16 கோடியும், 2வது வீரருக்கு ரூ.12 கோடியும், 3வது வீரருக்கு ரூ.8 கோடியும், 4வது வீரருக்கு ரூ.6 கோடியும் கொடுக்கவேண்டும்.

அந்தவகையில், ஆர்சிபி அணி முதல் வீரராக விராட் கோலியையும், 2வது வீரராக க்ளென் மேக்ஸ்வெல்லையும் தக்கவைப்பது உறுதி. எஞ்சிய 2 இடத்திற்கு தேவ்தத் படிக்கல், யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் படேல் மற்றும் முகமது சிராஜ் ஆகிய 4 வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த 4 வீரர்களில் முடிவு செய்யப்பட்டு யாராவது இருவர் தக்கவைக்கப்படுவார்கள்.  மற்ற வீரர்களும் கண்டிப்பாக தேவையென்றால், ஏலத்தில் Right To Match-ஐ பயன்படுத்திக்கொள்ளலாம்.
 

click me!