BAN vs PAK டெஸ்ட்: 146/1-லிருந்து 286 ரன்னுக்கு ஆல் அவுட்..! டைஜுல் இஸ்லாமிடம் மண்டியிட்டு சரணடைந்த பாகிஸ்தான்

By karthikeyan VFirst Published Nov 28, 2021, 3:25 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதல் விக்கெட்டுக்கு 146 ரன்களை சேர்த்த பாகிஸ்தான் அணி, 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி, லிட்டன் தாஸின் அபார சதம் (114) மற்றும் சீனியர் வீரர் முஷ்ஃபிகுர் ரஹீமின் பொறுப்பான பேட்டிங்கால் (91) முதல் இன்னிங்ஸில் 330 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அபித் அலி மற்றும் அப்துல்லா ஷாஃபிக் ஆகிய இருவரும் மிகச்சிறப்பாக ஆடினர். மிகச்சிறப்பாக ஆடிய இருவருமே அரைசதம் அடித்தனர். அடித்து ஆடி முதலில் அரைசதம் அடித்தார் அபித் அலி. அரைசதத்தை கடந்த அவர், சதத்தை நெருங்கிய நிலையில், 2ம் நாள் ஆட்டம் முடிந்தது. 2ம் நாள் ஆட்டம் முடிவதற்கு முன் அப்துல்லாவும் அரைசதம் அடித்தார். 2ம் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 145 ரன்கள் அடித்திருந்தது.  அபித் அலி 93 ரன்களுடனும், அப்துல்லா ஷாஃபிக் 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

3ம் நாளான இன்றைய ஆட்டத்தை அபித் அலியும் அப்துல்லாவும் தொடர்ந்த நிலையில், இன்று வந்ததுமே ஒரு ரன் கூட அடிக்காமல் டைஜுல் இஸ்லாமின் சுழலில் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் அப்துல்லா ஷாஃபிக். அதன்பின்னர் அசார் அலி (0), பாபர் அசாம் (10), ஆலம் (8), முகமது ரிஸ்வான் (5) ஆகியோர் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி சதமடித்த அபித் அலியும் 133 ரன்னில் டைஜுல் இஸ்லாமின் சுழலில் வீழ்ந்தார். பின்வரிசையில் சிறப்பாக ஆடிய ஃபஹீம் அஷ்ரஃப் 38 ரன்கள் அடித்த நிலையில் அவரும் டைஜுல் இஸ்லாமின் சுழலில் வீழ்ந்தார். ஹசன் அலி (12), நௌமன் அலி (8) ஆகியோரும் இஸ்லாமின் சுழலில் ஆட்டமிழக்க, 146 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் அணி, டைஜுல் இஸ்லாமின் அபாரமான பவுலிங்கால் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி டைஜுல் இஸ்லாமிடம் மண்டியிட்டு சரணடைந்தது. அபித் அலி, அப்துல் ஷாஃபிக், அசார் அலி, ஆலம், ஃபஹீம் அஷ்ரஃப், ஹசன் அலி, நௌமன் அலி ஆகிய 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார் வங்கதேச ஸ்பின்னர் டைஜுல் இஸ்லாம்.

இதையடுத்து 44 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது வங்கதேச அணி.
 

click me!