#SRHvsRCB ஒரே ஓவரில் ஆட்டத்தை தலைகீழாக திருப்பிய ஷபாஸ் அகமது..! சன்ரைசர்ஸை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி

By karthikeyan VFirst Published Apr 14, 2021, 11:11 PM IST
Highlights

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில்  6 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது.
 

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. சென்னையில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் ஆடியது.

ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக கோலியும் தேவ்தத் படிக்கல்லும் களமிறங்கினர். படிக்கல் 11 ரன்னில் ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் களத்திற்கு வந்த ஷபாஸ் அகமது 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கோலியுடன் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் அடித்து ஆடி ஸ்கோர் செய்ய, இருவருக்கும் இடையே பார்ட்னர்ஷிப் வளர்ந்து வந்த வேளையில், கோலி 33 ரன்னில் ஹோல்டரின் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் களத்திற்கு வந்த ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர்(8), கிறிஸ்டியன்(1) ஆகிய வீரர்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். கைல் ஜாமிசன் 12 ரன் அடித்தார். கோலி ஆட்டமிழந்த பின்னர், மேக்ஸ்வெல்லுக்கு பேட்டிங் ஆட அதிகமாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் கடைசி ஓவரில் அரைசதத்தை எட்டி, ஆர்சிபி அணி 149 ரன்களை எட்ட உதவினார் மேக்ஸ்வெல். 

இதையடுத்து 150 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் ரிதிமான் சஹா 9 பந்தில் வெறும் ஒரு ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வார்னரும் மனீஷ் பாண்டேவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 83 ரன்களை சேர்த்தனர். 

அரைசதம் அடித்த வார்னர், 54 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் சன்ரைசர்ஸ் அணிக்கு ரன் வேகம் குறைந்தது. 16 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு சன்ரைசர்ஸ் அணி 115 ரன்கள் அடித்திருந்தது. கடைசி 4 ஓவரில் வெறும் 35 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவைப்பட்டது.

சன்ரைசர்ஸ் எளிதாக இந்த இலக்கை அடித்திருக்கலாம். ஆனால் 17வது ஓவரை வீசிய ஆர்சிபி ஸ்பின்னர் ஷபாஸ் அகமது, அந்த ஓவரில் பேர்ஸ்டோ, மனீஷ் பாண்டே மற்றும் அப்துல் சமாத் ஆகிய மூவரையும் வீழ்த்த, அடுத்த ஓவரில் ஹர்ஷல் படேல், விஜய் சங்கரை வீழ்த்த, 19வது ஓவரில் சிராஜ் ஹோல்டரை வீழ்த்தினார்.

தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில் 143 ரன்களை மட்டுமே அடித்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. எளிதாக வென்றிருக்க வேண்டிய போட்டியில், வெற்றியை ஆர்சிபிக்கு தாரைவார்த்தது சன்ரைசர்ஸ் அணி.
 

click me!