IPL 2022: எங்களுக்கு அந்த ஒரு விஷயம் தான் இந்த சீசனில் பெரிய பிரச்னையா இருக்கு! சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா வருத்தம்

By karthikeyan VFirst Published Apr 26, 2022, 5:59 PM IST
Highlights

ஐபிஎல் 15வது சீசனில் சிஎஸ்கே அணியின் பெரிய பிரச்னையாக இருப்பது என்னவென்று கேப்டன் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசன் சிஎஸ்கே அணிக்கு மோசமாக அமைந்துள்ளது. ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சியில் இந்த சீசனில் ஆடிவரும் சிஎஸ்கே அணி, 8 போட்டிகளில் ஆடி வெறும் 2 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் 9ம் இடத்தில்(கடைசிக்கு முந்தைய இடம்) உள்ளது.

ஃபாஃப் டுப்ளெசிஸின் இழப்பு, ஏலத்தில் எடுத்த தீபக் சாஹர் காயத்தால் ஆடமுடியாமல் போனது, ஜடேஜா மற்றும் மொயின் அலியின் மோசமான பேட்டிங் ஃபார்ம், ருதுராஜின் மோசமான பேட்டிங் ஃபார்ம், பவுலிங் யூனிட்டின் சொதப்பல் என பல விஷயங்கள் சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளன.

அதில் முக்கியமானதும், முதன்மையானதும் என்னவென்றால் டாப் ஆர்டர் பேட்டிங்கின் சொதப்பல் தான். ஃபாஃப் டுப்ளெசிஸ் இருந்தபோது, அவருடன் இணைந்து அருமையாக பேட்டிங் ஆடி அபாரமான தொடக்கங்களை அமைத்து கொடுத்து கடந்த சீசனில் சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட், இந்த சீசனில் 8 போட்டிகளில் ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். மற்ற அனைத்து இன்னிங்ஸ்களிலும் சொதப்பிவிட்டார். அவருடன் ஓபனிங் பார்ட்னராக இறங்கும் ராபின் உத்தப்பாவும் சொதப்புகிறார்.

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் 188 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணி 176 ரன்கள் அடித்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் கடைசி 2 ஓவர்களில் லிவிங்ஸ்டோனும் தவானும் இணைந்து அடித்து ஆடி அணியின் ஸ்கோரை 187ரன்களாக உயர்த்திவிட்டனர். இல்லையெனில் ஸ்கோர் இன்னும் கொஞ்சம் குறைவாகத்தான் வந்திருக்கும். பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தோல்விக்கு பின்னர், சிஎஸ்கேவின் தோல்வி குறித்து பேசினார் கேப்டன் ரவீந்திர ஜடேஜா.

சிஎஸ்கே அணி குறித்து பேசிய கேப்டன் ஜடேஜா, பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் 10-15 ரன்கள் அதிகமாக வழங்கிவிட்டோம். பவுலர்கள் திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை.175 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருந்தால் வெற்றி பெற்றிருப்போம். முதல் 6 ஓவர்களில் பவர்ப்ளேயில் எங்களுக்கு நல்ல தொடக்கம் அமைவதில்லை. அதுதான் பெரிய பிரச்னையாக இருக்கிறது. விரைவில் தோல்விகளிலிருந்து மீண்டு வலுவான அணியாக திரும்புவோம் என்று ஜடேஜா தெரிவித்துள்ளார்.
 

click me!