
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் நாளையும்(பிப்ரவரி 12) நாளை மறுநாளும் (பிப்ரவரி 13) பெங்களூருவில் நடக்கவுள்ளது. இந்த ஏலத்தில் டேவிட் வார்னர், ஷ்ரேயாஸ் ஐயர், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, குயிண்டன் டி காக் உள்ளிட்ட பெரிய வீரர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளதால் இந்த ஏலம் மிக சுவாரஸ்யமானதாக இருக்கும்.
பெரிய வீரர்கள் மட்டுமல்லாது அண்டர் 19 உலக கோப்பையை வென்ற இந்திய அண்டர் 19 வீரர்கள் சிலரும் பெரிய தொகைக்கு விலைபோவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக இணைவதால் இளம் வீரர்களுக்கான தேவை இருப்பதால், இளம் வீரர்கள் மீது அதிக ஆர்வம் காட்டப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில், இந்த சீசனுக்கான ஏலத்தில் ஆவேஷ் கானுக்காக பெரிய போரே நடக்கும் என்று ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார்.
25 வயது இளம் ஃபாஸ்ட் பவுலரான ஆவேஷ் கானுடன் அஷ்வின் டெல்லி கேபிடள்ஸ் அணியில் இணைந்து ஆடியிருக்கிறார். ஐபிஎல் 14வது சீசனில் டெல்லி அணிக்காக அபாரமாக பந்துவீசிய ஆவேஷ் கான், 16 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி, கடந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது பவுலராக திகழ்ந்தார் ஆவேஷ் கான்.
ஆவேஷ் கான் மிகச்சிறப்பாக பந்துவீசி டெல்லி அணிகளின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியபோதிலும், அதிகபட்சம் 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்பதால், ரிஷப் பண்ட் (ரூ.16 கோடி), அக்ஸர் படேல் (ரூ.9 கோடி), பிரித்வி ஷா (ரூ.7.5 கோடி), அன்ரிக் நோர்க்யா (ரூ.6.5 கோடி) ஆகிய நால்வரையும் தக்கவைத்துவிட்டு ஷ்ரேயாஸ் ஐயர், ஆவேஷ் கான், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய பெரிய வீரர்களை விடுவித்தது டெல்லி அணி.
இந்நிலையில், ஆவேஷ் கானுக்காக ஐபிஎல் ஏலத்தில் அணிகள் அடித்துக்கொள்ளும் என்று அஷ்வின் கூறியுள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அஷ்வின், ஆவேஷ் கானுக்காக ஐபிஎல் ஏலத்தில் பெரிய போரே நடக்கும் என்பதில் சந்தேகமில்லை. கண்டிப்பாக அவரை எடுக்க சில அணிகள் கடுமையாக போராடும். 2010 ஐபிஎல் ஏலத்தில் என்னை எடுக்க விஜய் மல்லையா எப்படி சிஎஸ்கேவுடன் கடுமையாக போட்டி போட்டாரோ, அதுமாதிரி ஒரு போட்டி ஆவேஷ் கானுக்கு நடக்கும். பார்த் ஜிண்டால் - கிரன் ராவ் இடையே ஆவேஷ் கானை எடுக்க போட்டி நடக்கும் என்று நினைக்கிறேன். அவரை எடுக்க எந்த அணிதான் ஆர்வம் காட்டாது. எந்த அணி வேண்டுமானாலும் ஆவேஷ் கானுக்கான போட்டியில் இணையும் என்று அஷ்வின் தெரிவித்துள்ளார்.