பாகிஸ்தான்னா என்ன பெரிய கொம்பா..? அதெல்லாம் ஒரு ஸ்பெஷல் திட்டமும் கிடையாது

By karthikeyan VFirst Published May 22, 2019, 1:55 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் 340 ரன்களுக்கு மேல் குவித்தது பாகிஸ்தான் அணி. 

உலக கோப்பை இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையில் தான் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளையும் லீக் சுற்றில் எதிர்கொண்டு ஆடுகின்றன. அதனால் இந்த உலக கோப்பையின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள இரு அணிகளாக கருதப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி பெரியளவில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த போட்டியைவிட பரபரப்பான போட்டி ஒன்று இருக்குமென்றால், அது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிதான். 

இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு அணிகளுமே வெற்றி பெறும் தீவிரத்தில் கடுமையாக ஆடும். கடந்த சில ஆண்டுகளாக இரு அணிகளும் சர்வதேச தொடர்களை தவிர வேறு போட்டிகளில் ஆடுவதில்லை என்பதால் சர்வதேச தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும்போது எதிர்பார்ப்பு எகிறுகிறது. 

2017ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியது. அதன்பின்னர் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி பழிதீர்த்தது. உலக கோப்பையை பொறுத்தமட்டில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை என்பதுதான் வரலாறு.

இந்த உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி ஜூன் 16ம் தேதி நடக்க உள்ளது. இந்திய அணி வலுவாக உள்ள அதேவேளையில், பாகிஸ்தான் அணியும் சிறப்பாக உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் 340 ரன்களுக்கு மேல் குவித்தது பாகிஸ்தான் அணி. பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. பவுலிங்கும் ஃபீல்டிங்கும்தான் மோசமாக உள்ளது. 

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் தயாரிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ரவி சாஸ்திரி, எந்த அணிக்கு எதிராகவும் சிறப்பு திட்டங்கள் எல்லாம் கிடையாது. இந்திய அணியின் வழக்கமான தரமான ஆட்டத்தை முழு வீச்சுடனும் தீவிரத்துடனும் அனைத்து போட்டிகளிலும் வீரர்கள் ஆடுவர். அணி பாகுபாடு இல்லாமல் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடுவதைத்தான் எதிர்பார்க்கிறோம் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

click me!