
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் - நவம்பரில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்திய அணியும் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை தேடிக்கொண்டிருக்கிறது.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க, அதற்கு வாய்ப்புள்ள வீரர்கள் அனைவரும் கடுமையாக போட்டி போட்டு வருகின்றனர். இந்திய அணிக்காக ஆடும் திறமை இருந்தும், அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவருபவர் சஞ்சு சாம்சன்.
மிகத்திறமையான பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன். ஆனால் அவரது ஆட்டத்தில் நிலைத்தன்மை இல்லாததால் இந்திய அணியில் அவருக்கு நிரந்தர இடம் கிடைக்கவில்லை. ஐபிஎல் 15வது சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி ஃபைனல் வரை அழைத்துச்சென்ற சஞ்சு சாம்சன், இந்த சீசனில் 458 ரன்கள் அடித்தார். அவர் நன்றாக ஆடியபோதிலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில், டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பதால், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு இடையே அணியில் இடம்பிடிக்க போட்டி நிலவுகிறது. ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்து நல்ல வேகத்தில் வருவதுடன் நன்றாக பவுன்ஸும் ஆகும். நன்றாக பவுன்ஸாகும் ஆடுகளங்களில் அபாயகரமான பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன். எனவே அந்த கண்டிஷனில் ஆடுவதற்கு நிறைய ஷாட்டுகளை வைத்திருப்பவர் சாம்சன். அதனால் அவரை டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார்.