கொரோனா ஊரடங்கு விதிகளை மீறிய கேகேஆர் வீரருக்கு அபராதம் விதித்த போலீஸ்

By karthikeyan VFirst Published May 29, 2021, 9:56 PM IST
Highlights

கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதற்காக கேகேஆர் அணி பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதிக்கு புனே போலீஸ் அபராதம் விதித்துள்ளது.
 

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா ஊரடங்கு கண்டிப்புடன் பின்பற்றப்பட்டுவருகிறது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளியை பின்பற்றுவது, தடுப்பூசி போடுவது ஆகியவை வலியுறுத்தப்பட்டுவருகின்றன.

பொதுவெளியில் மாஸ்க் அணியவில்லை என்றாலோ, ஊரடங்கை மீறி சுற்றினாலோ அபராதம் விதிக்கப்படுகிறது. காவல்துறை அதை தீவிரமாக கண்காணித்துவருகிறது. 

இந்நிலையில், புனே நகரில் எவ்வித காரணமும் இல்லாமல் காரில் சுற்றியுள்ளார் கிரிக்கெட் வீரர் ராகுல் திரிபாதி. அதுவும் மாஸ்க் கூட அணியாமல் கார் ஓட்டிச்சென்ற கிரிக்கெட் வீரர் ராகுல் திரிபாதியை புனே நகரின் கோந்த்வா பகுதியில் பிடித்த போலீஸ், ஊரடங்கு விதிகளை மீறிய அவருக்கு அபராதம் விதித்தது. 

ராகுல் திரிபாதி கிரிக்கெட் களத்திலும், களத்திற்கு வெளியேயும் நல்லொழுக்கமும், நல்ல பண்புகளும் கொண்ட நல்ல நபர் என்பதை அவருடன் ஆடிய பல வீரர்களும் தெரிவித்துள்ளனர். அண்மையில் அவருடன் கேகேஆர் அணியில் ஆடும் பாட் கம்மின்ஸ், அவர் ஜாலியான நபர் என்றும், அணிக்காக எதையும் செய்யத்துணிந்தவர் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், அவர் குறித்த நெகட்டிவான விஷயம் வெளிவந்துள்ளது.
 

click me!