போன முறை மாதிரி இந்த முறை ஈசியா இருக்காது..! இந்திய அணியை முன்கூட்டியே எச்சரிக்கும் ராகுல் டிராவிட்

By karthikeyan VFirst Published Jun 12, 2020, 2:17 PM IST
Highlights

இந்த ஆண்டின் இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ள நிலையில், இந்திய அணியை எச்சரித்துள்ளார் ராகுல் டிராவிட். 
 

இந்திய அணி இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று டெஸ்ட் தொடரில் ஆடுவதாக திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2018 - 2019ல் நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், முதல் முறையாக 2018-2019 டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. 

இந்நிலையில், அதன்பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டின் இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு செல்கிறது. கடந்த முறை ஸ்மித் - வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்தி தொடரை வென்றுவிட்டது. ஆனால் இந்த முறை, ஸ்மித் - வார்னர் மட்டுமல்லாது, லபுஷேன் என்ற மற்றொரு மிகச்சிறந்த வீரரும் இணைந்துள்ளார். எனவே வரப்போகும் ஆஸ்திரேலிய தொடர் இந்தியாவிற்கு கடும் சவாலாக இருக்கும். 

இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுமே இந்த முறை பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டு துறைகளிலும் சமபலம் வாய்ந்த அணிகளாக திகழும் நிலையில், இந்த சுற்றுப்பயணம் இரு அணிகளுக்குமே கடும் சவாலாக இருக்கும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான ராகுல் டிராவிட், ஆஸ்திரேலியா - இந்தியா இடையே இந்த முறை நடக்கவுள்ள டெஸ்ட் தொடர் மிகச்சிறந்த தொடராக அமையும். கடந்த முறை இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்தி தொடரை வென்றதால், அந்த அணி இந்த முறை தொடரை வெல்லும் முனைப்பில் இருக்கும். இந்த தொடரை ஆடுவதற்குள்ளாக கொரோனாவிலிருந்து மீண்டுவிடுவோம் என நம்புகிறேன்.

இரு அணிகளுக்குமே இந்த தொடர் மிகவும் சவாலானதாக இருக்கும். ஸ்மித்தும் வார்னரும் அணிக்கு திரும்பிவிட்டதால், ஆஸ்திரேலிய அணி அதன் முழு பலத்தை பெற்றுள்ளது. கடந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் தான் சொதப்பியது. பல இன்னிங்ஸ்களில் அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் சிதைந்தது. ஆனால் இப்போது ஸ்மித்தும் வார்னரும் திரும்பிவிட்டதால் பேட்டிங் ஆர்டரில் பிரச்னை இருக்காது. 

ஆஸ்திரேலிய அணியின் பவுலிங் சிறந்து விளங்குகிறது. இந்திய அணியும் சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்றிருப்பதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அபாரமாக பந்துவீசிவருகிறது. இரு அணிகளுமே பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சமபலத்துடன் திகழ்வதால், இந்த தொடர் மிகச்சிறப்பானதாக இருக்கும். ஆஸ்திரேலிய அணி கடந்த முறை தோற்றபோது, ஸ்மித்தும் வார்னரும் அணியில் இல்லாததை சொல்லிக்காட்டிக் கொண்டே இருந்தனர். ஆனால் இந்த முறை அவர்கள் அணிக்கு திரும்பிவிட்டனர். எனவே இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும்.

ஸ்மித்தும் வார்னரும் ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரிய சக்திகள். அவர்கள் அணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள். ஆஸ்திரேலிய அணிக்காக அதிகமான ரன்களை குவிக்கக்கூடிய பேட்ஸ்மேன்கள். ஆஷஸ் தொடரில் ஸ்மித் தனது சிறப்பான பேட்டிங்கால் ஏற்படுத்திய தாக்கத்தை பாருங்கள்.(ஆஷஸ் தொடரில் 7 இன்னிங்ஸில் 774 ரன்களை குவித்தார் ஸ்மித்).  எனவே இந்திய அணி இந்த முறை ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் சுற்றுப்பயணம், கடும் சவாலானதாக இருக்கும். வலுவான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இந்திய அணி முழுமையான தகுதியையும் சக்தியையும் பெற்றுள்ளது. இந்திய அணியிலும் டாப் வீரர்கள் உள்ளனர் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 
 

click me!