ஆல்டைம் உலக பெஸ்ட் வழுக்கைத்தலை லெவன்..! ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று இந்திய வீரரும் லிஸ்ட்டில் சேர்ப்பு

By karthikeyan VFirst Published Jun 11, 2020, 9:41 PM IST
Highlights

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், வித்தியாசமான முறையில் உலக பெஸ்ட் வழுக்கைத்தலை லெவன் வீரர்களை தேர்வு செய்துள்ளார். 
 

கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் இல்லாத நிலையில், கிரிக்கெட் வீரர்கள் ஆல்டைம் லெவன், சமகால பெஸ்ட் லெவன், சிறந்த பேட்ஸ்மேன்கள், பவுலர்கள், ஃபீல்டர்கள் ஆகியோரை தேர்வு செய்துவருகின்றனர்.

அந்தவகையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், சற்று வித்தியாசமாக கிரிக்கெட்டில் ஆடிய வழுக்கைத்தலை வீரர்களில் சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்து, ஆல்டைம் உலக வழுக்கைத்தலை லெவனை அறிவித்துள்ளார்.

இந்த அணியின் தொடக்க வீரர்களாக இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரஹாம் கூச் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஹெர்ஷல் கிப்ஸ் ஆகிய இருவரையும் தேர்வு செய்தார். ஆனால் ரசிகர்கள், டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முச்சதம் அடித்த அதிரடி மன்னன் சேவாக்கை சேர்க்குமாறு வலியுறுத்தியதையடுத்து, ரசிகர்களின் வேண்டுகோளுக்கு செவிமடுத்த மைக்கேல் வாகன், கிப்ஸை நீக்கிவிட்டு சேவாக்கை சேர்த்தார். 

மூன்றாம் வரிசையில் தென்னாப்பிரிக்காவின் ஆம்லாவை தேர்வு செய்துள்ளார். வழுக்கை தலையான ஆம்லா, மொத்தமாக மொட்டியடித்து, நீளமான தாடியுடன் தோற்றமளிப்பார். நிறைய போட்டிகளில் ஆடாவிட்டாலும், மிகச்சிறந்த ரெக்கார்டுகளை கொண்டவர் ஆம்லா. 

நான்காம் வரிசையில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் டேரன் லீமெனையும் ஐந்தாம் வரிசையில் இங்கிலாந்தின் ஜோனாதன் டிராட்டையும் தேர்வு செய்த மைக்கேல் வாகன், ஆறாம் வரிசை வீரராக பிரயன் குளோஸ் என்ற இங்கிலாந்து வீரரை தேர்வு செய்துள்ள மைக்கேல் வாகன், வழுக்கைத்தலை அணியின் கேப்டனாக அவரையே தேர்வு செய்துள்ளார். பிரயன் குளோஸ், 1949லிருந்து 1976ம் ஆண்டு வரை இங்கிலாந்து அணியில் ஆடியவர். அதனால் அவரை பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

விக்கெட் கீப்பராக இங்கிலாந்தின் மாட் பிரயரையும், ஸ்பின்னர்களாக சமகால ஸ்பின்னர்களான இங்கிலாந்தின் ஜாக் லீச் மற்றும் ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். பாகிஸ்தானின் ரானா நவீத் உல் ஹசன் மற்றும் நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் கிறிஸ் மார்டின் ஆகியோரையும் வழுக்கைத்தலை அணியில் சேர்த்துள்ளார். 

இந்த லிஸ்ட்டில், வெஸ்ட் இண்டீஸின் பிரயன் லாரா மற்றும் இங்கிலாந்தின் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் ஆகியோரையும் சேர்க்குமாறு ரசிகர்கள் வலியுறுத்திவருகின்றனர். 

மைக்கேல் வாகன் தேர்வு செய்த ஆல்டைம் உலக வழுக்கைத்தலை லெவன்:

கிரஹாம் கூச், வீரேந்திர சேவாக், ஹாஷிம் ஆம்லா, டேரன் லீமென், ஜோனாதன் டிராட், பிரயன் க்ளோஸ்(கேப்டன்), மாட் பிரயர், போலிஞ்சர், ரானா நவீத் உல் ஹசன், நேதன் லயன், ஜாக் லீச்/கிறிஸ் மார்டின். 
 

click me!