இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட்..?

By karthikeyan VFirst Published Oct 14, 2021, 4:51 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவரும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடைகிறது. கடந்த 2017ம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரவி சாஸ்திரி, 4 ஆண்டுகள் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த நிலையில், அவரது பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிகிறது.

இங்கிலாந்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் ஆடிக்கொண்டிருந்த அதே சமயத்தில் இலங்கையில் இந்திய அணி ஆடிய கிரிக்கெட் தொடருக்கு, முன்னாள் கேப்டனும் லெஜண்ட் கிரிக்கெட்டருமான ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்பட்டார். 

எனவே ரவி சாஸ்திரிக்கு பிறகு ராகுல் டிராவிட் தான் இந்திய அணியின் பயிற்சியாளர் என்று கருதப்பட்டது. ஆனால் அதுகுறித்த எந்த தகவலும் இல்லை. ராகுல் டிராவிட் இப்போதைக்கு இந்திய அணியின்  முழுநேர பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க தயாராக இல்லை என்று தெரிகிறது.

இதையும் படிங்க - அமீரகத்தில் நாங்கதான் கிங்.. இந்தியாவை வீழ்த்திருவோம்..! பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அதிரடி

ஆனால் அதேவேளையில், மீண்டும் ஒருமுறை, ஒரு தொடருக்கான இடைக்கால பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலக கோப்பை முடிந்த கையோடு இந்தியா வரும் நியூசிலாந்து அணி, இந்தியாவிற்கு எதிராக 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. டி20 உலக கோப்பை முடிந்த உடனேயே, அடுத்த பயிற்சியாளரை தேர்வு செய்ய முடியாது. எனவே நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியின் தற்காலிக பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

click me!