பாகிஸ்தானுக்கு எதிரா சொல்லி அடித்த கில்லி ராகுல் டிராவிட்.. 2004ல் நடந்த சுவாரஸ்யம்.. வியந்துபோன ரசிகர்கள்

By karthikeyan VFirst Published May 4, 2020, 2:38 PM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிராக 2004ல் ராவல்பிண்டி டெஸ்ட்டில் இரட்டை சதத்தை சொல்லி அடித்தது குறித்த சுவாரஸ்யமான தகவலை ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவரும் இந்திய அணியின் மிகச்சிறந்த வீரரும் முன்னாள் கேப்டனுமானவர் ராகுல் டிராவிட். சச்சின் டெண்டுல்கர், கங்குலி ஆகிய வீரர்கள் சோபிக்காத பல போட்டிகளில் தனி ஒருவனாக போராடி வெற்றிகளை பெற்று கொடுத்தவர்.

ராகுல் டிராவிட்டின் பொறுமையும் மன உறுதியும் போராட்ட குணமும் அபரிமிதமானது. 164 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 13288 ரன்களை குவித்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் நான்காமிடத்தில் இருப்பவர் ராகுல் டிராவிட். 

ராகுல் டிராவிட் களத்தில் நங்கூரம் போட்டுவிட்டால் அவரை வீழ்த்துவது கடினம். இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் ராகுல் டிராவிட். சுயநலத்திற்காக ஒரு இன்னிங்ஸை கூட ஆடாத ஒரு வீரர் என்றால் அது ராகுல் டிராவிட் தான். அணியின் வெற்றிக்காகவும் நலனுக்காகவும் மட்டுமே ஆடியவர். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும், அண்டர் 19, இந்தியா ஏ அணிகளின் தலைமை பயிற்சியாளர், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் என இந்திய கிரிக்கெட்டுக்காக தொடர்ச்சியாக சிறப்பான பங்காற்றிவருகிறார்.

இந்நிலையில் ராகுல் டிராவிட், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோரான 270 ரன்களை பாகிஸ்தானுக்கு எதிராக 2004ல் அடித்தது குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்திய அணி கடைசியாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆடிய டெஸ்ட் தொடர் அதுதான். அந்த தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றன. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்தது. 

அந்த போட்டியில் ராகுல் டிராவிட் அபாரமாக ஆடி 270 ரன்களை குவித்தார். அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் வெறும்224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் நாள் ஆட்டத்திலேயே முதல் இன்னிங்ஸை தொடங்கியது இந்திய அணி. முதல் நாள் ஆட்ட முடிவில் பார்த்திவ் படேலும் ராகுல் டிராவிட்டும் களத்தில் இருந்தனர். ராகுல் டிராவிட் 10 ரன்களுடன் களத்தில் இருந்தார். அன்றைய தினமே பத்திரிகையாளர்களிடம், தான் மறுநாள் ஆடப்போகும் பெரிய இன்னிங்ஸ் குறித்து பேசியுள்ளார் ராகுல் டிராவிட். அதேபோலவே அபாரமாக ஆடி ராகுல் டிராவிட் இரட்டை சதமடிக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 600 ரன்களை குவிக்க, இரண்டாவது இன்னிங்ஸிலும் பாகிஸ்தான் சரியாக ஆடாமல் 245 ரன்களீல் ஆட்டமிழக்க, இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை வென்றது. 

அந்த ராவல்பிண்டி டெஸ்ட்டில் தான் ஆடப்போகும் பெரிய இன்னிங்ஸ் குறித்து முதல் நாளே பத்திரிகையாளர்களிடம் பேசியது குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ளார் ராகுல் டிராவிட். 

அதுகுறித்து பேசியுள்ள ராகுல் டிராவிட், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ராவல்பிண்டி டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்ட முடிவில் 10-15 ரன்களுடன் நான் களத்தில் இருந்தேன். முதல் நாள் ஆட்டம் முடிந்ததும் நான் டின்னர் சாப்பிடுவதற்காக சென்றபோது என்னை பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டனர். எனது பேட்டிங் அப்போது சிறப்பாக இருப்பது எனக்கே தெரிந்தது. அந்த 15 ரன்களை நான் சிறப்பாக ஆடி அடித்திருந்தேன். அதுமட்டுமல்லாமல் அந்த தொடர் முழுவதுமே மிகுந்த நம்பிக்கையுடன் சிறப்பாக ஆடினேன். ஆனால் ஒரு பெரிய ஸ்கோர் கூட அடிக்கவில்லை.

அதனால் அங்கிருந்து திரும்புவதற்குள் ஒரு பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்று எனக்கு இருந்தது. எனவே பத்திரிகையாளர்களிடம், நான் நாளை(இரண்டாம் நாள் ஆட்டம்) செட்டில் ஆகிவிட்டால், அதாவது ஒருமணி நேரம் நிலைத்துவிட்டால் என்னிடம் இருந்து பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம் என்றேன். அதேபோலவே 270 ரன்கள் அடித்தேன். அதன்பின்னர் அனைவரும் என்னிடம் வந்து, எப்படி உங்களுக்கு பெரிய ஸ்கோர் அடிக்கப்போகிறீர்கள் என்று தெரியும் என என்னிடம் கேட்டனர் என்று ராகுல் டிராவிட்  தெரிவித்துள்ளார்.

click me!