தனி ஒருவனாக பஞ்சாப்பை கரைசேர்க்க போராடிய தமிழன் ஷாருக்கான்.! சிஎஸ்கேவிற்கு எளிய இலக்கு

By karthikeyan VFirst Published Apr 16, 2021, 9:25 PM IST
Highlights

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பிய பஞ்சாப் கிங்ஸ் அணி வெறும் 107 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது.
 

பஞ்சாப் கிங்ஸ் - சிஎஸ்கே இடையே மும்பை வான்கடேவில் நடக்கும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் தோனி, பஞ்சாப் கிங்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

கடந்த போட்டியில் சரியாக ஆடாத தீபக் சாஹர், இந்த போட்டியில் வெறித்தனமாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் ஓவரிலேயே அருமையான அவுட் ஸ்விங் வீசி மயன்க் அகர்வாலை கிளீன் போல்டாக்கி ரன்னே அடிக்கவிடாமல் அவுட்டாக்கினார்.

இதையடுத்து கேஎல் ராகுலுடன் கெய்ல் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில், 3வது ஓவரில் ராகுல் 5 ரன்னுக்கு ரன் அவுட்டானார். ஜடேஜாவின் அருமையான த்ரோவால், ராகுல் ரன் அவுட்டானார். அந்த ரன்னுக்கு ராகுல் தான் அழைத்தார். ராகுல் அழைத்ததையடுத்துத்தான், கெய்ல் அந்த ரன்னை ஓடினார்.

இதையடுத்து பவர்ப்ளேயில் ஐந்தாவது ஓவரை தனது 3வது ஓவராக வீசிய தீபக் சாஹர், அந்த ஓவரில் கெய்ல்(10), பூரன்(0) ஆகிய இருவரையும் வீழ்த்த, பவர்ப்ளேயிலேயே 4 விக்கெட்டுகளை இழந்தது பஞ்சாப் கிங்ஸ். பவர்ப்ளேயின் கடைசி ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். அந்த ஓவரில் விக்கெட் இல்லை.

இதையடுத்து 7வது ஓவரையும் தீபக் சாஹரிடமே கொடுத்தார் கேப்டன் தோனி. தீபக் சாஹர் ஏற்கனவே 3 ஓவர்களை வீசியிருந்த நிலையில், 7வது ஓவரிலேயே தீபக் சாஹரின் கோட்டா முடிந்தாலும் பரவாயில்லை என்று பந்தை கொடுத்தார். தோனியின் அந்த செயல் சரியானதுதான் என்பதை நிரூபிக்கும் விதமாக, அந்த ஓவரில் தீபக் ஹூடாவையும் 10 ரன்னில் தீபக் சாஹர் வீழ்த்த, 26 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

அதன்பின்னர் தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கான் ஒருமுனையில் நிலைத்து நின்று ஆட, மறுமுனையில் ஜெய் ரிச்சர்ட்ஸன்(15), முருகன் அஷ்வின்(6) ஆகியோர் ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடி தனி ஒருவனாக பஞ்சாப் அணியின் ஸ்கோரை உயர்த்திய ஷாருக்கான் 47 ரன்னில் கடைசி ஓவரில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் பஞ்சாப் அணி வெறும் 106 ரன்கள் மட்டுமே அடித்தது. 

107 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே அணி எளிதாக அடித்துவிடும்.
 

click me!