IPL 2022 எங்களுக்கு யாருமேவேண்டாம்;எல்லாரையுமே ஏலத்தில் புதுசா எடுத்துக்குறோம்! PBKS அணியின் அதிர்ச்சி முடிவு

By karthikeyan VFirst Published Nov 28, 2021, 5:33 PM IST
Highlights

ஐபிஎல் 15வது சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளதால், ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த வீரரையுமே தக்கவைக்க வேண்டாம் என்று பஞ்சாப் கிங்ஸ் அணி முடிவெடுத்துள்ளதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

ஐபிஎல்லில் இதுவரை 8 அணிகள் ஆடிவந்த நிலையில், அடுத்த சீசனிலிருந்து கூடுதலாக 2 அணிகள் சேர்வதால் மொத்தம் 10 அணிகள் ஆடவுள்ளன. லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக களமிறங்குகின்றன.

அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. எனவே ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்றவர்களை விடுவிக்க வேண்டும். 2 புதிய அணிகளும், ஏலத்திற்கு முன்பாக தலா 3 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம்.

ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க வரும் 30ம் தேதியே கடைசி நாள். எனவே ஒவ்வொரு அணியும் எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், டேவிட் வார்னர், ஷிகர் தவான், மயன்க் அகர்வால் ஆகிய வீரர்கள் அவர்கள் சார்ந்த அணிகளால் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஐபிஎல் ஏலம் பரபரப்பாக இருக்கும்.

ஒவ்வொரு அணியும் ஐபிஎல் ஏலத்தில் ரூ.90 கோடி செலவு செய்யலாம். 4 வீரர்களை தக்கவைப்பதென்றால், அதற்கு அதிகபட்சமாக ரூ.42 கோடியை ஒதுக்க வேண்டும். ஒரு அணி தக்கவைக்கும் முதல் வீரருக்கு ரூ.16 கோடியும், 2வது வீரருக்கு ரூ.12 கோடியும், 3வது வீரருக்கு ரூ.8 கோடியும், 4வது வீரருக்கு ரூ.6 கோடியும் கொடுக்கவேண்டும்.

ஒவ்வொரு அணியும் எந்த 4 வீரர்களை தக்கவைப்பதென்று மண்டையை பிய்த்துக்கொண்டு யோசிக்கும் நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியோ எந்த வீரரையுமே தக்கவைக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளது. 

முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், ஷமி ஆகிய சிறந்த வீரர்களும், ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய திறமையான இளம் வீரர்களும், வெஸ்ட் இண்டீஸ் இளம் அதிரடி வீரரான நிகோலஸ் பூரன் என பல சிறந்த வீரர்கள் இருந்தாலும், யாரையுமே தக்கவைக்காமல், அணிக்கு தேவையான அனைத்து வீரர்களையும் மெகா ஏலத்தில் எடுத்து முழுக்க முழுக்க புதிய அணியை கட்டமைக்க பஞ்சாப் கிங்ஸ் அணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நல்ல ஃபார்மில் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிவரும் கேஎல் ராகுலைக்கூட தக்கவைக்க வேண்டாம் என்று பஞ்சாப் கிங்ஸ் எடுத்துள்ள முடிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
 

click me!