RCB vs PBKS: பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டோன் காட்டடி அரைசதம்..! ஆர்சிபிக்கு கடின இலக்கை நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்

By karthikeyan VFirst Published May 13, 2022, 9:26 PM IST
Highlights

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவரில் 209 ரன்களை குவித்து, 210  ரன்கள் என்ற கடின இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்துள்ளது.
 

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. இரு அணிகளுக்குமே பிளே ஆஃப் வாய்ப்பு இருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெறுவது மிக முக்கியம்.

மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். ஆர்சிபி அணி அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடம், பஞ்சாப் அணி ஒரு மாற்றத்துடனும் களமிறங்கின.

ஆர்சிபி அணி:

விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), ரஜாத் பட்டிதார், க்ளென் மேக்ஸ்வெல்,  தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மஹிபால் லோம்ரார், ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

ஜானி பேர்ஸ்டோ, ஷிகர் தவான், பானுகா ராஜபக்சா, மயன்க் அகர்வால் (கேப்டன்), ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட்கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் ப்ரார், அர்ஷ்தீப் சிங்.

முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ முதல் ஓவர் முதலே அடித்து ஆட ஆரம்பித்தார். அதிரடியாக ஆடி மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்தில் சிக்ஸர் மழை பொழிந்த பேர்ஸ்டோ, 21 பந்தில் அரைசதம் அடித்தார். தவான் 21 ரன்னிலும், பானுகா ராஜபக்சா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஆனால் பேர்ஸ்டோ அதிரடியை தொடர்ந்தார். ஹேசில்வுட், சிராஜ், மேக்ஸ்வெல் ஆகியோரின் பவுலிங்கை பொளந்துகட்டினார் பேர்ஸ்டோ. அதன்விளைவாக பஞ்சாப் அணி பவர்ப்ளேயில் ஆறு ஓவரில் 83 ரன்களை குவித்தது. 29 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 66 ரன்களை விளாசி பேர்ஸ்டோ ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஒன்றிரண்டு ஓவர்களில் ரன் வேகம் குறைந்தது. ஆனால் அதன்பின்னர் லிவிங்ஸ்டோன் அதிரடியாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அரைசதம் அடித்த லிவிங்ஸ்டோன் 42 பந்தில் 70 ரன்கள் அடித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார் லிவிங்ஸ்டோன். 

இதையடுத்து 20 ஓவரில் 209 ரன்களை குவித்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 210 ரன்கள் என்ற கடினமான இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!