அன்று ஜடேஜா; இன்று ராகுல்.. கடைசி ஓவரில் மரண அடி வாங்கிய ஆர்சிபியின் ஹர்ஷல் படேல்.! ஆர்சிபிக்கு சவாலான இலக்கு

By karthikeyan VFirst Published Apr 30, 2021, 9:40 PM IST
Highlights

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 179 ரன்களை குவித்து 180 ரன்களை ஆர்சிபிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
 

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, பஞ்சாப் கிங்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ராகுல் மற்றும் மயன்க் அகர்வாலுக்கு பதில் அணியில் எடுக்கப்பட்ட பிரப்சிம்ரன் சிங் ஆகிய இருவரும் களமிறங்கினர்.

பிரப்சிம்ரன் சிங் 7 ரன்னில் ஆட்டமிழக்க, நிதானமாக தொடங்கிய ராகுலுடன் அதிரடி மன்னன் கெய்ல் ஜோடி சேர்ந்தார். பவர்ப்ளேயின் முதல் 5 ஓவர்களில் பஞ்சாப் அணி வெறும் 29 ரன்கள் மட்டுமே அடித்திருக்க, பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் கெய்ல் 5 பவுண்டரிகளை விளாச, பவர்ப்ளேயில் 49 ரன்களை குவித்தது பஞ்சாப் அணி.

பவர்ப்ளே முடிந்த அடுத்த 7வது ஓவரை சாஹல் வீச, அந்த ஓவரில் 2 சிக்ஸர்களை கெய்ல் விளாச, கெய்ல் அடித்து ஆட தொடங்கியதையடுத்து, ராகுலும் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாச ஆரம்பித்தார்.

அதிரடியாக ஆடி 23 பந்தில் 46 ரன்கள் அடித்த கெய்ல், அவர் எதிர்கொண்ட 24வது பந்தில் சாம்ஸின் பவுலிங்கில் ஆட்டமிழந்து வெளியேறினார். கெய்லின் அதிரடியால், பஞ்சாப் அணியின் ரன்வேகம் வேகமாக உயர, கெய்ல் அவுட்டாகும்போது அந்த அணியின் ஸ்கோர் 10.4 ஓவரில் 99 ரன்களாக இருந்தது.

கெய்ல் அவுட்டான பிறகு, தீபக் ஹூடா(4), பூரன்(0), ஷாருக்கான்(0) ஆகியோர் சொதப்ப, 10.4 ஓவரில் 99 ரன்கள் என்ற நிலையில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 14.4 ஓவரில் 118 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற மோசமான நிலைக்கு சென்றது.

அதன்பின்னர் ராகுலுடன் ஜோடி சேர்ந்த ஹர்ப்ரீத் ப்ரார், ராகுலுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். இந்த சீசனில் இதுவரை அதிக விக்கெட் வீழ்த்திய பவுலரான ஹர்ஷல் படேல், சிஎஸ்கேவிற்கு எதிராக கடைசி ஓவரை வீசும்போது, அவரது கடைசி ஓவரில் ஜடேஜா 37 ரன்களை விளாசினார்.

அதேபோலவே இந்த போட்டியிலும் கடைசி ஓவரில் ரன்களை வாரி வழங்கினார். ஹர்ஷல் படேல் வீசிய 18வது ஓவரில் ஹர்ப்ரீத் ப்ரார், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசினார். முகமது சிராஜ் 19வது ஓவரை நன்றாக வீச, மீண்டும் ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் ராகுல் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரும், ஹர்ப்ரீத் ஒரு சிக்ஸரும் விளாச, கடைசி ஓவரில் 22 ரன்களை குவித்ததால் பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவரில் 179 ரன்களை குவித்து 180 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயிக்க, அந்த இலக்கை ஆர்சிபி அணி விரட்டிவருகிறது.
 

click me!