குஜராத்துக்கு ஆப்பு – கடவுள் மாதிரி காப்பாத்திய ஷஷாங்க் சிங்: பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி!

By Rsiva kumarFirst Published Apr 4, 2024, 11:40 PM IST
Highlights

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 17ஆவது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 200 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அகமதாபாத் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 17ஆவது ஐபிஎல் லீக் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது.

இதில் அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் 200 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் செய்தது. இதில் கேப்டன் ஷிகர் தவான் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, சாம் கரண் 5 ரன்னில் நடையை கட்டினார். ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் பிராப்சிம்ரன் சிங் இருவரும் இணைந்து ஓரளவு ரன்கள் எடுத்துக் கொடுத்தனர்.

ஜானி பேர்ஸ்டோவ் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். பிராப்சிம்ரன் சிங் 35 ரன்களில் நடையை கட்டினார். பஞ்சாப் கிங்ஸ் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த 10 ஓவருக்கு பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு 117 ரன்கள் தேவைப்பட்டது. இதில் சிக்கந்தர் ராசா 15 ரன்னிலும், ஜித்தேஷ் சர்மா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அவ்வளவு தான் பஞ்சாப் தோற்கப்போகிறது என்று எண்ணிக்கொண்டிருந்த நிலையில் ஷஷாங்க் சிங் மற்றும் அஷூடோஷ் சர்மா இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். கடைசி 4 ஓவருக்கு 47 ரன்கள் தேவைப்பட்டது. இதில் இம்பேக்ட் பிளேயராக வந்த அஷூடோஷ் சர்மா 17 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 31 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக விளையாடிய ஷஷாங்க் சிங் ஐபிஎல் தொடரில் முதல் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். கடைசியில் பஞ்சாப் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தர்ஷன் நீலகண்டே வீசிய அந்த ஓவரில் ஒரு ஒய்டு, ஒரு பவுண்டரி, ஒரு சிங்கிள் மற்றும் ஒரு லெக் பைஸ் கிடைக்கவே பஞ்சாப் கிங்ஸ் கடைசி பந்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஷஷாங்க் சிங் 29 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

click me!