
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முல்தான் சுல்தான்ஸ், லாகூர் காலண்டர்ஸ், இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் பெஷாவர் ஸால்மி ஆகிய 4 அணிகளும் தகுதிச்சுற்றுக்கு முன்னேறின. புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த முல்தான் சுல்தான்ஸ் மற்றும் லாகூர் காலண்டர்ஸ் அணிகள் முதல் தகுதிச்சுற்று போட்டியில் மோதின.
லாகூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முல்தான் சுல்தான்ஸ் அணி:
முகமது ரிஸ்வான் (கேப்டன், விக்கெட் கீப்பர்), உஸ்மான் கான், ரைலீ ரூசோ, கைரன் பொல்லார்டு, டிம் டேவிட், குஷ்தில் ஷா, அன்வர் அலி, உசாமா மிர், அப்பாஸ் அஃப்ரிடி, ஷெல்டான் காட்ரெல், ஈசானுல்லா.
லாகூர் காலண்டர்ஸ் அணி:
ஃபகர் ஜமான், மிர்சா தாஹிர் பைக், அப்துல்லா ஷாஃபிக், சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ஹுசைன் டலட், சிக்கந்தர் ராஸா, டேவிட் வீஸ், ரஷீத் கான், ஷாஹீன் அஃப்ரிடி (கேப்டன்), ஹாரிஸ் ராஃப், ஜமான் கான்.
முதலில் பேட்டிங் ஆடிய முல்தான் சுல்தான்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் உஸ்மான் கான் மற்றும் ரிஸ்வான் இணைந்து நிதானமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். உஸ்மான் கான் 29 ரன்களும், ரிஸ்வான் 33 ரன்களும் அடித்தனர். அதன்பின்னர் 4ம் வரிசையில் இறங்கி அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த கைரன் பொல்லார்டு 34 பந்தில் 6 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் அடித்தார். டிம் டேவிட் 15 பந்தில் 22 ரன்கள் விளாச, 20 ஓவரில் முல்தான் சுல்தான்ஸ் அணி 160 ரன்கள் அடித்தது.
161 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய லாகூர் காலண்டர்ஸ் அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து மளமளவென ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாகவே சாம் பில்லிங்ஸ் 19 ரன்கள் தான் அடித்தார். அதுவும் 27 பந்தில் அந்த ரன்னை அடித்தார். மற்றவர்கள் அதைவிட மோசமாக சொதப்ப, 15வது ஓவரில் வெறும் 76 ரன்களுக்கு ஆல் அவுட்டானது லாகூர் அணி.
மும்பையில் சிறுவர்களுடன் ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆடிய வார்னர்..! வைரல் வீடியோ
84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற முல்தான் சுல்தான்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறியது. இந்த போட்டியில் தோற்ற லாகூர் காலண்டர்ஸ் அணி, இஸ்லாமாபாத் - பெஷாவர் அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டரில் ஜெயிக்கும் அணியை 2வது தகுதிச்சுற்று போட்டியில் எதிர்கொள்ளும்.