
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் நடந்தது. வீரர்களை ஏலம் எடுக்க ஒவ்வொரு அணிக்கும் அதிகபட்சமாக தலா ரூ.90 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. 10 அணிகளில், புதிதாக களமிறங்கவுள்ள லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி மட்டுமே ஒரு ரூபாயைக்கூட வீணடிக்காமல் மொத்த தொகையையும் துல்லியமாக பயன்படுத்திய ஒரே அணி.
ஐபிஎல் கோப்பையை 2 முறை கேகேஆருக்கு வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கௌதம் கம்பீர் தான் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படுகிறார். ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ அணி சார்பில் கம்பீர் கலந்துகொண்டார். ஐபிஎல்லில் கோப்பையை வெல்லும் வித்தையை அறிந்த கௌதம் கம்பீர், ஏலத்தில் மிகச்சிறப்பாக அந்த அணியை வழிநடத்தினார்.
ஏலத்திற்கு முன்பாகவே கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ரவி பிஷ்னோய் ஆகிய மூன்று வீரர்களை வாங்கி, கேஎல் ராகுலை கேப்டனாக நியமித்துவிட்டது லக்னோ அணி. ஏலத்தில் தங்களுக்கு எந்த மாதிரியான வீரர்கள் தேவை என்பது குறித்த தெளிவான திட்டத்துடன் ஏலத்திற்கு வந்த லக்னோ அணி, ஒரு ரூபாய் கூட மிஞ்சாத வகையில், மொத்த ரூ.90 கோடியையும் பயன்படுத்தி வீரர்களை வாங்கியது.
ராகுலுடன் தொடக்க வீரராக இறங்க, தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் - டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான குயிண்டன் டி காக்கை ரூ.6.75 கோடிக்கு லக்னோ அணி எடுத்தது. டி காக்கை மட்டுமல்லாது, மற்றொரு ஓபனிங் ஆப்சனாக வெஸ்ட் இண்டீஸின் அதிரடி பேட்ஸ்மேன் எவின் லூயிஸை ரூ.2 கோடிக்கு எடுத்தது.
மிடில் ஆர்டர் பேட்டிங் ஆப்சனாக மனீஷ் பாண்டே மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவரும் முறையே ரூ.4.60 கோடி மற்றும் ரூ.5.75 கோடிக்கும் எடுத்தது.
ஏலத்திற்கு முன்பாகவே ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸை அணியில் எடுத்துவிட்ட லக்னோ அணி, ஏலத்திலும் ஆல்ரவுண்டர்கள் மீது ஆர்வம் காட்டியது. சமகாலத்தின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரும் மேட்ச் வின்னருமான ஜேசன் ஹோல்டரை ரூ.8.75 கோடிக்கு எடுத்த லக்னோ அணி, ஸ்பின் ஆல்ரவுண்டர் க்ருணல் பாண்டியாவை ரூ.8.25 கோடிக்கு எடுத்தது. மற்றுமொரு ஸ்பின் ஆல்ரவுண்டரான கிருஷ்ணப்பா கௌதமை ரூ.90 லட்சத்திற்கு தட்டி தூக்கியது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகிய தரமான ஆல்ரவுண்டர்களை லக்னோ அணி எடுத்தது சரியான தேர்வு.
ஃபாஸ்ட் பவுலர்கள் தேர்விலும் மிகக்கவனமாக செயல்பட்ட லக்னோ அணி, ஃபாஸ்ட் பவுலர்களாக இந்தியாவின் ஆவேஷ் கான் (ரூ.10 கோடி) மற்றும் இங்கிலாந்தின் மார்க் உட் (ரூ.7.5 கோடி) ஆகிய இருவருடன் அங்கித் ராஜ்பூத்தை ரூ.50 லட்சத்திற்கு எடுத்தது லக்னோ அணி. ஷபாஸ் நதீம், மனன் வோரா, கரன் ஷர்மா, ஆயுஷ் பதானி உள்ளிட்ட அன்கேப்டு வீரர்கள் சிலரையும் அணியில் எடுத்தது.
ஐபிஎல் மெகா ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டு சிறந்த வீரர்களை வாங்கி வலுவான அணியை கட்டமைத்ததில் முக்கியமான அணிகளில் ஒன்று லக்னோ அணி. சில வீரர்களுக்கு அதிகமான தொகையை கொடுத்தாலும், அணியின் எதிர்காலத்திற்கு அவர்கள் தேவை என்ற வகையில், அதை முழு மன திருப்தியுடன் செய்தது லக்னோ அணி.
ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக களமிறங்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் சிறந்த, வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
தொடக்க வீரராக கேப்டன் கேஎல் ராகுலுடன் விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக் இறங்குவார். 3ம் வரிசையில் மனீஷ் பாண்டே, 4ம் வரிசையில் தீபக் ஹூடா ஆகிய இருவரும் இறங்குவார்கள்.
லக்னோ அணியில் ஏகப்பட்ட ஆல்ரவுண்டர்கள் இருப்பதால், 5ம் வரிசையில் இருந்தே ஆல்ரவுண்டர்கள் தான். மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜேசன் ஹோல்டர் ஆகிய 2 ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர்களும், அதன்பின்னர் க்ருணல் பாண்டியா மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகிய இருவரும் ஆடுவார்கள். இவர்களுடன் ஸ்பின்னராக ரிஸ்ட் ஸ்பின்னர் ரவி பிஷ்னோயும், ஃபாஸ்ட் பவுலர்களாக மார்க் உட் மற்றும் ஆவேஷ் கான் ஆகிய இருவரும் ஆடுவார்கள்.
உத்தேச லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜேசன் ஹோல்டர், க்ருணல் பாண்டியா, கிருஷ்ணப்பா கௌதம், ரவி பிஷ்னோய், மார்க் உட், ஆவேஷ் கான்.