இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான போட்டி.. உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Jun 30, 2019, 1:05 PM IST
Highlights

அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில், இதுவரை தோல்வியையே தழுவாத இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. 

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடக்கிறது. 

இந்த உலக கோப்பையை அபாரமாக தொடங்கிய இங்கிலாந்து அணி, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால், எஞ்சிய 2 போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கிடையே உலக கோப்பையை மோசமாக தொடங்கிய பாகிஸ்தான் அணி, தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் நான்காமிடத்திற்கு முன்னேறியது. இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் ஐந்தாமிடத்தில் உள்ளது. 

அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில், இதுவரை தோல்வியையே தழுவாத இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த போட்டி, உலக கோப்பை தொடரின் முக்கியமான காலக்கட்டத்தில் நடப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

பர்மிங்காமில் இந்த போட்டி நடக்கவுள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டிகளில் ஆடிய அதே அணியுடன் தான் இந்திய அணி ஆடும். புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக அணியில் இணைந்த ஷமி, ஆடிய இரண்டு போட்டிகளிலுமே தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு எதிரணிகளை ரன் அடிக்க விடாமல் பயங்கரமாக கட்டுப்படுத்தினார். எனவே அவர் தான் இன்றைய போட்டியிலும் ஆடுவார். 

அதேபோல நான்காம் வரிசையில் பெரிதாக சோபிக்காத விஜய் சங்கரை நீக்கிவிட்டு ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தாலும் கூட, விஜய் சங்கர் தான் ஆடுவார் என்பதை செய்தியாளர் சந்திப்பில் கேப்டன் கோலி உறுதிப்படுத்தினார். எனவே விஜய் சங்கர் கண்டிப்பாக இந்த போட்டியில் ஆடுவார். மற்றபடி கேதர், குல்தீப், சாஹல் ஆகியோர் மாற்றப்படுவதற்கான வாய்ப்பே இல்லை என்பதால் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்காது. 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), விஜய் சங்கர், தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ஷமி, சாஹல், பும்ரா. 
 

click me!