அவரு மேல எனக்கு அதீத நம்பிக்கை இருக்கு.. கேப்டன் கோலியின் அபிப்ராயத்தை தாறுமாறாக பெற்ற இளம் வீரர்

By karthikeyan VFirst Published Jun 30, 2019, 12:40 PM IST
Highlights

இன்றைய போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டு ஆடவுள்ள நிலையில், இந்திய வீரர் ஒருவர் மீது தானும் அணியும் வைத்திருக்கும் நம்பிக்கையை கேப்டன் கோலி வெளிப்படுத்தியுள்ளார். 

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. எஞ்சிய ஒரு இடத்திற்கு இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

இந்த உலக கோப்பை தொடரில் இதுவரை தோற்காத அணியாக இந்திய அணி கெத்தாக வலம்வந்தாலும் இந்திய அணியில் சில குறைபாடுகள் உள்ளன. ஆனால் இந்திய அணியின் வெற்றி அவற்றை மறைத்துவிடுகிறது. இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்டிங்கும் பவுலிங்கும் சிறப்பாக உள்ளது. மிடில் ஆர்டரில் உள்ள சிக்கல் தொடர்ந்து நீடித்துவருகிறது. ஆனால் டாப் ஆர்டர் பேட்டிங் மற்றும் அபாரமான பவுலிங்கால் இந்திய அணி வெற்றி பெறுவதால் மிடில் ஆர்டர் பிரச்னை பெரிதாக தெரியவில்லை. 

உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியின் நான்காம் வரிசை குறித்த பெரிய விவாதமே நடந்தது. பல பரிசோதனை முயற்சிகளுக்கு பிறகு ஒருவழியாக விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டார். ஆனால் பயிற்சி போட்டியில் நான்காம் வரிசையில் ராகுல் சிறப்பாக ஆடியதால் முதல் சில போட்டிகளில் ராகுல் தான் நான்காம் வரிசையில் ஆடினார். விஜய் சங்கருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. 

ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் காயமடைந்து தொடரிலிருந்து விலகிய பிறகு, ராகுல் தொடக்க வீரராக இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் விஜய் சங்கர் நான்காம் வரிசை வீரராக அணியில் இடம்பெற்றார். ஆனால் அந்த வரிசைக்கு அவர் அர்த்தம் சேர்க்கவில்லை. தன்னை நான்காம் வரிசையில் இறக்கியது சரியான முடிவுதான் என்பதை அவர் நியாயப்படுத்தவில்லை. 

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கிய விஜய் சங்கர் 15 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 29 ரன்கள் அடித்த விஜய் சங்கர், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக மிடில் ஓவர்களில் நின்று ஆடக்கூடிய வாய்ப்பு கிடைத்தும் அதை பயன்படுத்தி கொள்ளாமல் வெறும் 14 ரன்களில் நடையை கட்டினார். இனிவரும் போட்டிகள் முக்கியமானது என்பதால் நான்காம் வரிசை வீரர் சிறப்பாக ஆடியாக வேண்டும் என்ற நிலையில், நான்காம் வரிசை குறித்த விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது. 

விஜய் சங்கருக்கு பதிலாக நான்காம் வரிசையில் ரிஷப் பண்ட்டை இறக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வலியுறுத்தினார். 

ஆனால் அவசரப்பட்டு விஜய் சங்கரை நீக்கிவிட்டு ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டாம் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் ஆலோசனை தெரிவித்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை விஜய் சங்கர் வென்று கொடுப்பார். எனவே அவசரப்பட்டு விஜய் சங்கரை நீக்கிவிட்டு ரிஷப் பண்ட்டை எடுப்பது குறித்து யோசிக்க வேண்டாம் என்று பீட்டர்சன் தெரிவித்திருந்தார். 

இன்று இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ள நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, விஜய் சங்கர் குறித்து பேசினார். அப்போது, பாகிஸ்தானுக்கு எதிராக விஜய் சங்கர் நன்றாக ஆடினார். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக ஆடிய ஆடுகளம் ஆடுவதற்கு கடினமாக இருந்தது. அதிலும் ஓரளவிற்கு ஆடினார். அவரது ஷாட் செலக்‌ஷனில் இருக்கும் சிறு சிறு சிக்கல்கள் குறித்து அவரிடம் பேசியிருக்கிறோம். மற்றபடி நன்றாகத்தான் ஆடுகிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியிலும் நன்றாக ஆடினார். ஆனால் கீமார் ரோச்சின் அபாரமான பந்தில் ஆட்டமிழந்தார். 

சிறு சிறு பிரச்னைகளை எல்லாம் ஆராய்ந்து சுட்டிக்காட்டி கொண்டே இருக்க முடியாது. என்னை பொறுத்தவரை விஜய் சங்கர் ஒரு நல்ல வீரர். கிரிக்கெட்டில் சில சமயங்களில் 30 ரன்களை 60 ரன்களாக மாற்ற அதிர்ஷ்டமும் தேவை. அதை அடையக்கூடிய இடத்தை விஜய் சங்கர் நெருங்கிவிட்டதாக கருதுகிறேன். எனவே அணிக்கு வெற்றியை தேடித்தரக்கூடிய அதுமாதிரியான பெரிய இன்னிங்ஸை ஆடுவார் என்று நான் நம்புகிறேன் என்றார் கோலி.

கேப்டன் உங்க மேல வச்சுருக்குற அதீத நம்பிக்கைக்காகவாவது ஒரு பெரிய இன்னிங்ஸை ஆடுங்கள் விஜய் சங்கர்... 
 

click me!