திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. தாறுமாறா அடித்து ஆடிய பிரித்வி ஷா.. ஆதித்யாவும் அதிரடி பேட்டிங்

By karthikeyan VFirst Published Nov 17, 2019, 12:40 PM IST
Highlights

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி தடையில் இருந்த பிரித்வி ஷா, உள்நாட்டு போட்டிகளில் ஆட அனுமதிக்கப்பட்டதை அடுத்து, சையத் முஷ்டாக் அலி தொடரில் அசாம் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியில் ஆடிவருகிறார். 
 

மும்பை மற்றும் அசாம் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி, தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஆதித்ய தரே ஆகியோரின் அதிரடியால் 20 ஓவரில் 206 ரன்களை குவித்தது. 

மேகாலயா அணிக்கு எதிராக அதிர்ச்சி தோல்வியடைந்த மும்பை அணி, இந்த போட்டியில் வெற்றி பெறும் தீவிரத்தில் களமிறங்கியுள்ளது. மும்பை அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஆதித்ய தரே ஆகிய இருவருமே தொடக்கம் முதலே அடித்து ஆடினர். இருவரும் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி, இருவருமே அரைசதம் அடித்தனர். 

முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 138 ரன்களை குவித்தனர். 48 பந்துகளில் 82 ரன்களை குவித்து ஆதித்ய தரேவும் 39 பந்துகளில் 63 ரன்களை குவித்து பிரித்வி ஷாவும் ஆட்டமிழந்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டானார். அதன்பின்னர் சித்தேஷ் லத்தின் அதிரடியான பேட்டிங்கால், மும்பை அணி 20 ஓவரில் 206 ரன்களை குவித்தது. 

207 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் அசாம் அணி ஆடிவருகிறது. பிரித்வி ஷாவிற்கு இது மிகவும் முக்கியமான இன்னிங்ஸ். தடையை பெற்ற அவருக்கு, மீண்டும் உத்வேகமும் உற்சாகமும் பெறுவதற்கு இந்த இன்னிங்ஸ் உதவும். 
 

click me!