லாரா, பாண்டிங், வாட்சன், சைமண்ட்ஸ் அதிரடி பேட்டிங்.. கடைசி பந்தில் பாண்டிங் அணி த்ரில் வெற்றி

By karthikeyan VFirst Published Feb 9, 2020, 12:21 PM IST
Highlights

பாண்டிங் மற்றும் கில்கிறிஸ்ட் அணிகளுக்கு இடையேயான புஷ்ஃபயர் கிரிக்கெட் போட்டியில் கடைசி பந்தில் பாண்டிங் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 
 

ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டுவதற்காக முன்னாள் ஜாம்பவான்கள் ஆடும் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடந்தது.

பாண்டிங் தலைமையிலான அணியும் கில்கிறிஸ்ட் தலைமையிலான அணியும் இந்த போட்டியில் மோதின.

பாண்டிங் அணி:

மேத்யூ ஹைடன், ஜஸ்டின் லாங்கர், ரிக்கி பாண்டிங்(கேப்டன்), லிட்ச்ஃபீல்டு, பிரயன் லாரா, அலெக்ஸ் பிளாக்வெல், பிராட் ஹேடின்(விக்கெட் கீப்பர்), டேனியல் கிறிஸ்டியன், லூக் ஹாட்ஜ், பிரெட் லீ, வாசிம் அக்ரம். 

கில்கிறிஸ்ட் அணி: 

ஆடம் கில்கிறிஸ்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷேன் வாட்சன், பிராட் ஹாட்ஜ், யுவராஜ் சிங், எலிஸ் வில்லானி, ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், கேமரூன் ஸ்மித், நிக் ரீவோல்ட், பீட்டர் சிடில், ஃபவாத் அகமது, குர்ட்னி வால்ஷ். 

இந்த போட்டியில் டாஸ் வென்ற கில்கிறிஸ்ட், பாண்டிங் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். பாண்டிங் அணியின் தொடக்க வீரர்களாக ஜஸ்டின் லாங்கரும் மேத்யூ ஹைடனும் களமிறங்கினர். 

இன்னிங்ஸின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த லாங்கர், மொத்தமாகவே 4 பந்துகள் மட்டுமே பேட்டிங் ஆடினார். அவர் ஆடிய நான்காவது பந்தில் குர்ட்னி வால்ஷின் பந்தில் கிளீன் போல்டானார். இதையடுத்து ஹைடனுடன் கேப்டன் பாண்டிங் ஜோடி சேர்ந்தார். 

பாண்டிங் அடித்து ஆட, சரியாக ஷாட் கனெக்ட் ஆகாமல் திணறிவந்த ஹைடன், யுவராஜ் சிங் வீசிய ஐந்தாவது ஓவரில் மூன்றாவது பந்தில் இறங்கிவந்து லாங் ஆஃபில் ஒரு சிக்ஸர் அடித்தார். அதற்கு அடுத்த பந்திலேயே ஹைடனின் விக்கெட்டை வீழ்த்தி பதிலடி கொடுத்தார் யுவராஜ் சிங். 

இதையடுத்து அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த பாண்டிங்கும் 14 பந்தில் 26 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் பிரயன் லாரா களத்திற்கு வந்து, பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி தள்ளினார். 11 பந்தில் 30 ரன்கள் அடித்து அவர் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். பிராட் ஹாட்ஜ் 4 பந்தில் 11 ரன்கள் அடிக்க, 10 ஓவரில் பாண்டிங் அணி 104 ரன்களை அடித்தது. 

105 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய கில்கிறிஸ்ட் அணியின் தொடக்க வீரர்களாக கில்கிறிஸ்ட்டும் ஷேன் வாட்சனும் களமிறங்கினர். இருவருமே அதிரடியாக ஆடி மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஷேன் வாட்சன் வெறும் 9 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 30 ரன்களை விளாசி ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். முதல் விக்கெட்டுக்கு வெறும் 3 ஓவரில் கில்கிறிஸ்ட்டும் வாட்சனும் இணைந்து 49 ரன்களை குவித்தனர்.

கில்கிறிஸ்ட் 11 பந்தில் 17 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பிராட் ஹாட்ஜ் மற்றும் யுவராஜ் சிங் ஆகிய இருவரையும் பிரெட் லீ வீழ்த்தினார். ஆண்ட்ரு சைமண்ட்ஸ் அதிரடியாக ஆடி 13 பந்தில் 29 ரன்களை குவித்து ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். கடைசி ஓவரில் கில்கிறிஸ்ட் அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. முதல் ஐந்து பந்தில் 7 ரன்கள் அடிக்கப்பட்டது. எனவே கடைசி பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தில் பவுண்டரி அடித்தார் நிக் ரீவோல்ட். எனவே 5 ரன்கள் வித்தியாசத்தில் பாண்டிங் லெவன் வென்றுவிட்டது என்று நினைத்தால் அதுதான் இல்லை. 

ஏனெனில் அந்த பந்து நோ பால். இதையடுத்து கடைசி பந்திற்கு ரீ பால் வீசப்பட்டது. அதில் 3 ரன்கள் அடிக்கப்பட்டது. எனவே ஒரு ரன் வித்தியாசத்தில் பாண்டிங் லெவன் அணி வெற்றி பெற்றது. ஜாலியாக ஆடப்பட்ட இந்த போட்டியில் வெற்றி தோல்வி என்பதெல்லாம் கிடையாது. காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக நடந்த இந்த போட்டியின் மூலம், அமெரிக்கன் டாலரில் சுமார் 7.7 மில்லியன் திரட்டப்பட்டுள்ளது. 

click me!