துணிச்சலான முடிவுதான்.. ஆனால் அது சரியா தவறா..? பாண்டிங் அதிரடி

By karthikeyan VFirst Published Sep 14, 2019, 2:48 PM IST
Highlights

69 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் அடித்துள்ளது. இதன்மூலம் மொத்தமாக 78 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. 
 

ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, பட்லரின் அதிரடியான அரைசதம் மற்றும் ஜோ ரூட்டின் பொறுப்பான அரைசதம் ஆகியவற்றின் விளைவாக முதல் இன்னிங்ஸில் 294 ரன்களை அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் மார்கஸ் ஹாரிஸ் ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, வழக்கம்போலவே ஸ்மித்தும் லபுஷேனும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தனர். லபுஷேன் 48 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட், டிம் பெய்ன், பாட் கம்மின்ஸ் என வரிசையாக ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை இழந்தது. 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் வழக்கம்போலவே நங்கூரமிட்டு ரன்களை குவித்துக்கொண்டிருந்த ஸ்மித், 80 ரன்களில் கிறிஸ் வோக்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 225 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியின் சார்பில் ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

69 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் அடித்துள்ளது. இதன்மூலம் மொத்தமாக 78 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. 

இந்நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பவுலிங் தேர்வு செய்தது துணிச்சலான முடிவு என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த பாண்டிங், டிம் பெய்ன் டாஸ் வென்றதுமே பேட்டிங் தான் தேர்வு செய்வார் என நினைத்தேன். ஆனால் அவர் மாறாக பவுலிங்கை தேர்வு செய்தார். அது ஒரு துணிச்சலான முடிவு. ஒரு கேப்டனாக இதுமாதிரியான, மற்றவர்கள் எதிர்பார்த்திராத முடிவை எடுக்க வேண்டும். ஆனால் அவர் பவுலிங்கை தேர்வு செய்தது சரியான முடிவா அல்லது தவறான முடிவா என்பதை போட்டியின் முடிவுதான் தீர்மானிக்கும். அதனால் அந்த முடிவு சரியா தவறா என்றெல்லாம் என்னால் சொல்ல முடியாது என்று பாண்டிங் தெரிவித்துவிட்டார். 
 

click me!