
தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடந்துவருகிறது. கராச்சியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி வெறும் 220 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் சுருண்டது.
தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் டீன் எல்கர் மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஒருமுனையில் அவர் நிலைத்து நிற்க, மறுமுனையில் மார்க்ரம், வாண்டர் டசன், சீனியர் வீரர் டுப்ளெசிஸ், கேப்டன் டி காக் ஆகிய அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த எல்கர் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் ஜார்ஜ் லிண்டே மட்டுமே ஓரளவிற்கு நன்றாக ஆடி 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசியில் ரபாடா 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 21 ரன்கள் அடித்தார். மறுமுனையில் இங்கிடி, நோர்க்யா ஆகியோர் ஆட்டமிழந்ததால் 220 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதல் நாள் ஆட்டத்தின் 3வது செசனிலேயே தென்னாப்பிரிக்க அணி ஆல் அவுட்டான நிலையில், அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, வெறும் 18 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்தது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அபித் அலி 4 ரன்னிலும், இம்ரான் பட் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர்கள் இருவரையும் தனது அடுத்தடுத்த ஓவர்களில் ரபாடா வீழ்த்தினார். கேப்டன் பாபர் அசாம் 7 ரன்களில் மஹராஜின் பந்தில் ஆட்டமிழக்க, 3 பேட்ஸ்மேன்களின் விக்கெட் விழந்ததால், நைட் வாட்ச்மேனாக இறக்கப்பட்ட நோர்க்யா நான்கே பந்தில் டக் அவுட்டானார். வெறும் 27 ரன்னுக்கே பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. தென்னாப்பிரிக்க அணி மோசமாக பேட்டிங் ஆடிய நிலையில், பாகிஸ்தான் அணி அதைவிட மோசமாக ஆடிவருகிறது.