பாபர் அசாம் அபார சதம்.. கடைசி பந்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் த்ரில் வெற்றி

By karthikeyan VFirst Published Apr 2, 2021, 10:07 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி.
 

பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று செஞ்சூரியனில் நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, வாண்டெர் டசனின் அபார சதத்தால் 50 ஓவரில் 273 ரன்களை குவித்துள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் டி காக்(20), மார்க்ரம்(19) ஆகிய இருவரையும் 7வது ஓவரில் வீழ்த்தினார் ஷாஹீன் அஃப்ரிடி.

அதன்பின்னர் கேப்டன் டெம்பா பவுமா மற்றும் ஹென்ரிச் க்ளாசன் ஆகிய இருவருமே தலா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, 14.2 ஓவரில் தென்னாப்பிரிக்க அணி வெறும் 55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

அந்த இக்கட்டான நிலையிலிருந்து வாண்டெர் டசனும் டேவிட் மில்லரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து தென்னாப்பிரிக்க அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த மில்லர் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஃபெலுக்வாயோ, ரபாடா ஆகியோரை ஒருமுனையில் நிறுத்திக்கொண்டு, மறுமுனையில் அபாரமாக ஆடி சதமடித்த வாண்டெர் டசன் 134 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 123 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று 50 ஓவரில் தென்னாப்பிரிக்க அணி 273 ரன்களை குவிக்க காரணமாக இருந்தார். 

தென்னாப்பிரிக்க அணி 273 ரன்களை குவிக்க, 274 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகர் ஜமான் 8 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் இமாம் உல் ஹக்கும் கேப்டன் பாபர் அசாமும் இணைந்து அபாரமாக ஆடி, 2வது விக்கெட்டுக்கு 178 ரன்களை சேர்த்தனர்.

அபாரமாக ஆடி சதமடித்த கேப்டன் பாபர் அசாம் 103 ரன்னில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து இமாம் உல் ஹக் 70 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் முகமது ரிஸ்வான் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் டானிஷ் அஜீஸ்(3), ஆசிஃப் அலி(2) ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 48வது ஓவரில் ரிஸ்வானும் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஷதாப் கான் களத்தில் நின்று அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றுகொண்டிருந்தார். கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு வெறும் 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரின் முதல் பந்தில் ஷதாப் கான் ஆட்டமிழக்க, அடுத்த 3 பந்திலும் ஃபஹீம் அஷ்ரஃப் ஒரு ரன் கூட அடிக்கவில்லை.

எனவே கடைசி 2 பந்தில் 3 ரன் தேவைப்பட்ட நிலையில், 5வது பந்தில் 2 ரன் அடித்த ஃபஹீம் அஷ்ரஃப், கடைசி பந்தில் ஒரு ரன் அடித்து பாகிஸ்தான் அணியை வெற்றி பெற செய்தார். இதையடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

click me!