
ஆஸி., சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் முன்னணி வீரர்களில் பெரும்பாலானோர் காயத்தால் ஒவ்வொருவராக விலக, அந்த டெஸ்ட் தொடரில் வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், நடராஜன் உள்ளிட்ட இளம் வீரர்கள் அறிமுகமாகி, அறிமுக போட்டியிலேயே அபாரமாக ஆடி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர்.
அணியின் நட்சத்திர வீரர்கள் பெரும்பாலானோர் இல்லாதபோதிலும், ஆஸி., மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்த இளம் வீரர்கள் உதவினார்கள். எனவே நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு மகேந்திரா நிறுவன காரை பரிசாக வழங்குவதாக ஆனந்த் மகேந்திரா தெரிவித்திருந்தார்.
அந்தவகையில், சொன்னபடியே மகேந்திரா நிறுவனத்தின் “Thar" எஸ்.யூ.வி ரக கார் நடராஜனுக்கு பரிசாக வழங்கப்பட்டது. அந்த காரை பெற்ற நடராஜன், ஆனந்த் மகேந்திராவுக்கு நன்றியை தெரிவித்ததுடன், தனக்கு அன்பும் ஆதரவும் அளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்த நடராஜன், தனக்கு பரிசாக கிடைத்த காரை தனது பயிற்சியாளர் ஜெயபிரகாஷுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
ஏற்கனவே தனது அபாரமான பவுலிங்கால் ரசிகர்களின் நன்மதிப்பை பெற்ற நடராஜனின் இந்த செயல், ரசிகர்கள் மத்தியில் அவர் மீதான மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது.