அவரோட கிரிக்கெட் வாழ்க்கை முடிஞ்சுது.. இனியும் அவர டீம்ல சேர்த்து தப்பு பண்ணாதீங்க

By karthikeyan VFirst Published Jun 19, 2019, 11:55 AM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டி.எல்.எஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை வெற்றி ரெக்கார்டை தக்கவைத்தது. 

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, உலக கோப்பையில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதேயில்லை என்ற சாதனையை தக்கவைத்தது. 

உலக கோப்பையில் இதுவரை 7 முறை இந்தியாவும் பாகிஸ்தானும் மோதியுள்ளன. இதில் அனைத்து போட்டிகளிலுமே இந்திய அணி தான் வென்றது. இந்த உலக கோப்பைக்கு முன்னதாக ஆடிய 6 உலக கோப்பை போட்டிகளிலும் இந்திய அணி தான் வென்றிருந்தது. முதன்முறையாக இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் களம்கண்ட பாகிஸ்தான் அணி மீண்டும் தோல்வியையே தழுவியது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் அதிரடி சதம், கோலி மற்றும் ராகுலின் அரைசதங்கள் ஆகியவற்றால் இந்திய அணி 336 ரன்களை குவித்தது. மழை குறுக்கீட்டால் பாகிஸ்தான் அணிக்கு 40 ஓவர்களில் 302 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் வெறும் 212 ரன்களுக்கு பாகிஸ்தான் அணியை சுருட்டி, டி.எல்.எஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. 

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஃபகார் ஜமான், பாபர் அசாமை தவிர மற்ற யாருமே சரியாக ஆடவில்லை. சீனியர் மற்றும் அனுபவ வீரர்களான முகமது ஹஃபீஸ் மற்றும் ஷோயப் மாலிக் ஆகியோரும் ஏமாற்றினர். இந்த உலக கோப்பையில் இதுவரை மூன்று இன்னிங்ஸ்களில் ஆடிய ஷோயப் மாலிக், 2 போட்டிகளில் டக் அவுட்டாகியுள்ளார். மொத்தமாகவே 8 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். 

20 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணியில் ஆடிவரும் மாலிக், அணியின் தூணாக திகழ்வார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை பரிசாக அளித்தார் மாலிக். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதல் பந்திலேயே போல்டாகி கோல்டன் டக் ஆனார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டக் அவுட் ஆனதுமே, அணியிலிருந்து அவரை நீக்கவேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. அந்த போட்டிக்கு பிறகு மாலிக் சரியாக ஆடாதபோதிலும் அவர் ஆடும் லெவனில் இருப்பது குறித்து கேப்டன் சர்ஃபராஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அவர் சீனியர் வீரர்; இனிவரும் போட்டிகளில் கண்டிப்பாக சிறப்பாக ஆடுவார் என்று சர்ஃபராஸ் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மாலிக்கை நீக்கிவிட்டு இமாத் வாசிமை சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்த நிலையில், ஆசிஃப் அலி நீக்கப்பட்டு இமாத் வாசிம் சேர்க்கப்பட்டார். இந்தியாவுக்கு எதிராகவும் டக் அவுட்டாகி பெரும் ஏமாற்றமளித்தார் மாலிக்.

இந்த உலக கோப்பையுடன் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற போவதாக உலக கோப்பைக்கு முன்னதாகவே அறிவித்துவிட்டார் 38 வயதாகும் ஷோயப் மாலிக். ஆனால் அவரது கெரியர் முடிந்துவிட்டதாகவே முன்னாள் வீரர்கள் கருதுகின்றனர். முன்னாள் வீரர்களின் கருத்தில் ஆழமான காரணமும் உண்மையும் இருக்கிறது. 

இந்த உலக கோப்பையில் இதுவரை 5 போட்டிகளில் ஆடியுள்ள பாகிஸ்தான் அணி ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. இன்னும் 4 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே இந்த உலக கோப்பையில் இனிவரும் 4 போட்டிகளில் மட்டுமே பாகிஸ்தான் அணி ஆடும். அந்த 4 போட்டிகளிலும் ஷோயப் மாலிக் சேர்க்கப்பட வாய்ப்பில்லை. 

எனவே இந்திய அணிக்கு எதிரான போட்டிதான் அவரது ஒருநாள் கெரியரில் கடைசி போட்டியாக இருக்கும். இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இக்பால் காசிம், இந்த உலக கோப்பையுடன் ஓய்வுபெறப்போவதாக மாலிக் ஏற்கனவே அறிவித்துவிட்டார். எனினும் இதுவரை அவர் ஆடிய போட்டிகளில் சரியாக ஆடவில்லை. எனவே இனிவரும் 4 போட்டிகளிலும் அவர் சேர்க்கப்படமாட்டார் என்று நினைப்பதாக காசிம் தெரிவித்துள்ளார். 

மாலிக் குறித்து பேசியுள்ள முகமது யூசுஃப், மாலிக்கின் கிரிக்கெட் கெரியர் முடிந்துவிட்டது என்றே நினைக்கிறேன். இனிவரும் போட்டிகளில் அவர் ஆடமாட்டார் என்று கருதுகிறேன். ஒருவேளை இனிவரும் போட்டிகளிலும் அவரை சேர்த்தால் அது மிகப்பெரிய தவறாகிவிடும் என்று யூசுஃப் தெரிவித்துள்ளார். 

எனவே இந்திய அணிக்கு எதிராக மாலிக் ஆடியதுதான் அவரது கடைசி போட்டியாக இருக்க அதிகமான வாய்ப்பிருக்கிறது. 
 

click me!