நாங்க ஒண்ணும் பிசிசிஐ பின்னாடியே திரியல.. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் அதிரடி

By karthikeyan VFirst Published Jul 24, 2020, 7:39 PM IST
Highlights

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு கிரிக்கெட் தொடர் குறித்து அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இசான் மணி தெரிவித்துள்ளார். 
 

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் என்றாலே களத்தில் அனல் பறக்கும். இரு அணிகளுமே மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். வெற்றி வேட்கையில் கடுமையாக போராடுவார்கள். இரு அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அது வெறும் விளையாட்டு போட்டியல்ல; ஓர் உணர்வு.

1980-90களில் பாகிஸ்தான் அணி இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் 1990களின் பிற்பகுதி மற்றும் 2000ம் ஆண்டுக்கு பிறகு நிலைமை மாற தொடங்கியது. பாகிஸ்தான் அணி மீது ஆதிக்கம் செலுத்தி இந்திய அணி அதிகமான வெற்றிகளை குவித்தது. 

2013ம் ஆண்டுக்கு பிறகு இரு அணிகளும் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. இருநாடுகளுக்கும் இடையே ராஜாங்க ரீதியில் சுமூக உறவு இல்லாத நிலையில், 2013ம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றனவே தவிர, இருதரப்பு தொடர்களில் ஆடுவதில்லை. 

இந்தியாவுடன் ஆடாதது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்குத்தான் பொருளாதார ரீதியாக இழப்பே தவிர, பாகிஸ்தானுடன் ஆடாததால் இந்திய அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. 2007-08க்கு பிறகு இரு அணிகளும் டெஸ்ட் தொடரில் ஆடவில்லை. 2013ம் ஆண்டுக்கு பிறகு இரு அணிகளும் இருதரப்பு தொடரில் ஆடவில்லை. ஆசிய கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, உலக கோப்பை ஆகிய தொடர்களில் மட்டும் இரு அணிகளும் மோதிவருகின்றன. 

இந்திய அணி பாகிஸ்தானுடன் ஆடுவதில்லை என்பதில் பிசிசிஐ உறுதியாக இருக்கிறது. பாகிஸ்தானுடன் ஆட வேண்டிய அவசியமே இல்லை என்கிற ரீதியில் கெத்து காட்டுகிறது பிசிசிஐ. 

பாகிஸ்தான் சார்பில், இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் கிரிக்கெட் தொடர்கள் நடக்கவேண்டும் என்ற குரல்கள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுவருகின்றன. ஆனால், பாகிஸ்தான் ஒன்றும் இந்தியாவுடன் ஆடும் ஆர்வத்தில் பிசிசிஐ பின்னாடியே திரியவில்லை என்று அதிரடியாக பேசியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இசான் மணி. 

இதுகுறித்து பேசியுள்ள அவர், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் குறித்த விவகாரத்தை நான் பிசிசிஐயிடமே விட்டுவிடுகிறேன். ஏனெனில் நாங்கள் இந்தியாவுடன் ஆட எப்போதுமே தயாராகத்தான் இருக்கிறோம். அதேவேளையில், நாங்கள் ஒன்றும் இந்தியாவுடன் ஆட வேண்டும் என்று பிசிசிஐ பின்னால் திரியவில்லை. ஆனால் எங்களுடன் ஆட இந்தியா தயார் என்றால், நாங்கள் ஆடுவோம். நாங்கள் எப்போதுமே தயாராகத்தான் இருக்கிறோம் என்று மணி தெரிவித்துள்ளார். 
 

click me!