முக்கியமான 2 தலைகளை ஓவர்டேக் செய்து கங்குலி இந்திய அணியின் கேப்டன் ஆனது எப்படி..?

By karthikeyan VFirst Published Jul 24, 2020, 5:28 PM IST
Highlights

சவுரவ் கங்குலி இந்திய அணியின் கேப்டன் ஆனது எப்படி என முன்னாள் அணி தேர்வாளர் அசோக் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, இந்திய கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர். இந்திய கிரிக்கெட் அணி சூதாட்டப்புகாரில் சிக்கி சின்னாபின்னமாகி, மக்களின் நம்பிக்கையை இழந்திருந்த கடினமான காலத்தில், அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற கங்குலி, இந்திய கிரிக்கெட் அணியை மறுகட்டமைப்பு செய்தவர். 

இழந்த மக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்து, இந்திய அணியின் மீதான மதிப்பை சர்வதேச கிரிக்கெட்டில் உயர்த்தியவர் கங்குலி. ஆக்ரோஷமான கங்குலி, வெற்றி வேட்கை கொண்டவர். சச்சின், டிராவிட், கும்ப்ளே ஆகிய சீனியர் வீரர்களுடன், சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், கைஃப், ஜாகீர் கான், ஆஷிஸ் நெஹ்ரா ஆகிய இளம் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆதரவும் வாய்ப்பும் அளித்து, அவர்களை கொண்டு வலுவான அணியை கட்டமைத்து வெற்றிகளை குவித்து கொடுத்தவர் கங்குலி. 

கங்குலி உருவாக்கிய வீரர்களில் பலர் மேட்ச் வின்னர்கள். கங்குலி தலைமையில் இந்திய அணி, உலக கோப்பையை வெல்லவில்லை. 2003 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் இறுதி போட்டியில் தோற்றதால் கோப்பையை இழந்தது இந்திய அணி. ஆனால் 2011ல் தோனி தலைமையில் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் ஆடிய மற்றும் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்த வீரர்கள் அனைவரும் கங்குலியால் உருவாக்கப்பட்டவர்கள். கங்குலி தான் இந்திய அணிக்கு சிறந்த அணி காம்பினேஷனை உருவாக்கி, அதை அப்படியே அடுத்த கேப்டனுக்கும் விட்டுச்சென்றார். 

கங்குலி தலைமையில் இந்திய அணி வெளிநாடுகளிலும் டெஸ்ட் வெற்றிகளை குவிக்க தொடங்கின. பாகிஸ்தான் அணி மீது ஆதிக்கம் செலுத்த தொடங்கியதும் அந்த காலக்கட்டம்தான். கங்குலி சிறந்த கேப்டன். அதனால் தான் இன்றுவரை ஒரு பேட்ஸ்மேன் என்பதைவிட அதிகமாக, ஒரு சிறந்த கேப்டனாக அனைவராலும் அறியப்படுகிறார். 

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பின்னர், அணியில் இருந்த மற்ற சில சீனியர் வீரர்களை பின்னுக்குத்தள்ளி கங்குலி எப்படி கேப்டன் ஆனார் என்பது குறித்து, அப்போதைய அணி தேர்வாளர்களில் ஒருவராக இருந்த அசோக் மல்ஹோத்ரா பேசியிருக்கிறார். 

ஆங்கில ஸ்போர்ட்ஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய அசோக் மல்ஹோத்ரா, சரியாக சொல்ல வேண்டுமென்றால், கங்குலி கேப்டனானதை விட துணை கேப்டனானதுதான் பெரிய கதை. எனக்கு நினைவிருக்கிறது.. கொல்கத்தாவில், கங்குலியை துணை கேப்டனாக்குவது என்று முடிவெடுத்தோம். அப்போதைய அணி பயிற்சியாளர் தேர்வாளர்களான எங்களிடம் வந்து கங்குலியை பற்றி பேசினார். கங்குலி நிறைய கோக் குடிக்கிறார், 2 ரன் ஓட வேண்டிய இடத்தில் ஒரு ரன் மட்டுமே ஓடுகிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

ஆனால் தேர்வாளர்கள் தரப்பில் அளித்த வாக்குகளில் 3-2 என முன்னிலை பெற்றார் கங்குலி. எனவே அவரை துணை கேப்டனாக்குவது என்று முடிவெடுத்தோம். அப்போதுதான், பிசிசிஐ வரலாற்றில் நடந்திராத சம்பவம் இன்று நடந்தது. கங்குலியை துணை கேப்டனாக தேர்வு செய்தபோது, திடீரென அங்கு வந்தார் அப்போதைய பிசிசிஐ தலைவர். அவரது பெயரை சொல்ல விரும்பவில்லை. அவர் திடீரென உள்ளே வந்து, கங்குலியை துணை கேப்டனாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கூறிவிட்டு சென்றார்.

பிசிசிஐ தலைவரே, கங்குலி துணை கேப்டன் ஆவதை விரும்பாததால், ஏற்கனவே கங்குலிக்கு ஆதரவாக வாக்களித்த மூவரில் ஒருவர் பின் வாங்கினார். ஆனால் ஒருவழியாக அவரை துணை கேப்டனாக்கிவிட்டோம். அதன்பின்னர் தலைசிறந்த கேப்டனாக கங்குலி உருவெடுத்தார். அவரை கேப்டனாக நியமிக்கக்கூட கஷ்டப்படவில்லை. துணை கேப்டனாக இருந்த அவரை பெரிய கஷ்டமில்லாமல் கேப்டனாக்கிவிட்டோம். ஆனால் துணை கேப்டனாக்குவதுதான் கஷ்டமாக இருந்தது. 

கங்குலி கேப்டன் ஆவார் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஏனெனில் சச்சின் கேப்டனாக இருந்துவந்தார். அவர் திடீரென ராஜினாமா செய்ததும், கங்குலியை கேப்டனாக்க, அனைவரையும் சம்மதிக்க வைக்க வேண்டியதாயிற்று. ஏனெனில் அனில் கும்ப்ளே மற்றும் அஜய் ஜடேஜா ஆகிய சீனியர்களும் கேப்டன் பதவிக்கான போட்டியில் இருந்தார்கள் என்று அசோக் மல்ஹோத்ரா தெரிவித்தார். 

click me!