அரையிறுதி வாய்ப்பை வலுவா தக்கவைத்த பாகிஸ்தான்.. செம பீதியில் இங்கிலாந்து

By karthikeyan VFirst Published Jun 27, 2019, 10:42 AM IST
Highlights

உலக கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிகண்ட பாகிஸ்தான் அணி, அரையிறுதி வாய்ப்பை வலுவாக தக்கவைத்துள்ளது. 
 

உலக கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிகண்ட பாகிஸ்தான் அணி, அரையிறுதி வாய்ப்பை வலுவாக தக்கவைத்துள்ளது. 

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, ஜேம்ஸ் நீஷம் மற்றும் கோலின் டி கிராண்ட் ஹோம் ஆகிய இருவரின் பொறுப்பான பேட்டிங்கால் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 237 ரன்கள் அடித்தது. மிகச்சிறப்பாக ஆடிய நீஷம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் அடித்திருந்தார். 

238 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக தொடங்கினர். எனினும் அவர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில், மூன்றாவது விக்கெட்டுக்கு பாபர் அசாமும் முகமது ஹஃபீஸும் சிறப்பாக ஆடினர். ஹஃபீஸ் 32 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் பாபர் அசாமும் ஹாரிஸ் சொஹைலும் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடினர். 

இந்த ஜோடியை நியூசிலாந்து அணியால் பிரிக்க முடியவில்லை. இருவரும் இணைந்து அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்ற நேரத்தில், 68 ரன்கள் அடித்த சொஹைல் 49வது ஓவரில் ஆட்டமிழந்தார். ஆனால் சதமடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த பாபர் அசாம் அணியை வெற்றி பெற செய்தார்.  இதையடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் 3 வெற்றிகளுடன் 7 புள்ளிகளை பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, புள்ளி பட்டியலில் 6ம் இடத்தில் உள்ளது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ளது. 

இங்கிலாந்து அணி 8 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ளன. அந்த இரண்டு போட்டிகளுமே வலுவான அணிக்கு எதிரானது. இங்கிலாந்து அணி எஞ்சிய 2 போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை எதிர்கொள்கிறது. இந்த 2 அணிகளையும் வீழ்த்துவது எளிது கிடையாது. அதேநேரத்தில் பாகிஸ்தான் அணி எஞ்சிய 2 போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளை எதிர்கொள்கிறது. எனவே அந்த 2 போட்டிகளிலுமே பாகிஸ்தான் அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் அணி எஞ்சிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று, இங்கிலாந்து அணி எஞ்சிய 2ல் ஒன்றில் தோற்றால் கூட பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும். 

வங்கதேச அணிக்கும் அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த அணி எஞ்சிய 2 போட்டிகளில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் எதிர்கொள்வதால், 2 அணிகளையும் வீழ்த்துவது கடினம். எனவே தற்போதைக்கு பாகிஸ்தான் அணிக்குத்தான் அரையிறுதி வாய்ப்பு அதிகமாக உள்ளது. 
 

click me!