இந்தியாவுக்கு எதிரா ஆடுறதுதான் கடைசி.. அதிரடியாக ஓய்வை அறிவித்தார் கிறிஸ் கெய்ல்

By karthikeyan VFirst Published Jun 26, 2019, 5:43 PM IST
Highlights

உலக கோப்பையில் கெய்ல் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு ஆடவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியும் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு வாய்ப்பில்லை. 
 

உலக கோப்பை தொடரில் நாளை நடக்கவுள்ள போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவை எதிர்கொண்டு ஆடவுள்ள நிலையில், கிறிஸ் கெய்ல் தனது ஓய்வு குறித்த திட்டத்தை தெரிவித்துள்ளார். 

1999ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுகமான கிறிஸ் கெய்ல், சர்வதேச அளவில் மிகச்சிறந்த அதிரடி வீரராக திகழ்ந்துவருகிறார். 2000ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான கெய்ல், 2014ம் ஆண்டுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் ஆடிவருகிறார். 

290 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள கிறிஸ் கெய்ல், 23 சதங்கள் அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதமடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரராக திகழ்கிறார். தனது அதிரடியான பேட்டிங்கால் டி20 ஸ்பெலிஷ்ட்டாக வலம் வருகிறார். ஐபிஎல், பிபிஎல், கனடா பிரீமியர் லீக், ஆஃப்கானிஸ்தான் பிரீமியர் லீக் உள்ளிட்ட பல டி20 லீக் தொடர்களில் ஆடிவருகிறார். 

கிரிக்கெட்டில் பேட்டிங்கில் எட்டப்பட்டுள்ள மைல்கற்களில் டாப் 5 இடங்களில் கெய்லின் பெயரும் இருக்கும். அதிக சிக்ஸர்கள், டாப் ஸ்கோர் ஆகிய பட்டியல்களில் கெய்லின் பெயர் கண்டிப்பாக இருக்கும். ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமும் அடித்துள்ளார் கெய்ல். 2015 உலக கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசிய கெய்ல் 215 ரன்களை குவித்தார். உலக கோப்பை தொடரில் இரட்டை சதமடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றவர் கெய்ல்.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆடாமல் இருந்த கெய்ல், உலக கோப்பைக்கான அணியில் எடுக்கப்பட்டு ஆடிவருகிறார். உலக கோப்பையில் கெய்ல் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு ஆடவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியும் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு வாய்ப்பில்லை. 

உலக கோப்பைக்கு முன்னதாக உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவேன் என்று கெய்ல் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளார் கெய்ல். நாளை வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியை எதிர்கொண்டு ஆடவுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கெய்ல், உலக கோப்பையுடன் ஓய்வு பெறும் முடிவை கைவிட்டுவிட்டேன். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடிவிட்டுத்தான் ஓய்வு பெறுவேன். ஆனால் டி20 தொடரில் ஆடமாட்டேன் என்று கெய்ல் கூறியுள்ளார். 

உலக கோப்பை முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி, 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இந்த தொடர் ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்குகிறது. இந்த ஒருநாள் தொடரில் ஆடிவிட்டுத்தான் ஓய்வுபெறுவேன் என்று கெய்ல் கூறியுள்ளார். 
 

click me!