ஒரே ஓவரில் 4 சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முடித்த ஆசிஃப் அலி! ஆஃப்கானை வீழ்த்தி அரையிறுதியில் ஒரு காலை வைத்த பாக்.,

By karthikeyan VFirst Published Oct 29, 2021, 11:14 PM IST
Highlights

ஆஃப்கானிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலக கோப்பை அரையிறுதியில் ஒரு காலை எடுத்து வைத்துவிட்டது பாகிஸ்தான் அணி.
 

டி20 உலக கோப்பையில் க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று துபாயில் நடந்தது. 

சூப்பர் 12 சுற்றில் இந்தியா, நியூசிலாந்து ஆகிய 2 வலுவான அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்ற அதே உத்வேகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் களமிறங்கியது பாகிஸ்தான் அணி. ஸ்காட்லாந்தை 130 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற அதே நம்பிக்கையுடன் தான் ஆஃப்கானிஸ்தானும் களமிறங்கியது.

துபாயில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. இரு அணிகளும் எந்த மாற்றமும் செய்யாமல், கடந்த போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கின.

பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஃபகர் ஜமான், முகமது ஹஃபீஸ்,ஷோயப் மாலிக், ஆசிஃப் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஷாஹீன் ஷா அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப்.

ஆஃப்கானிஸ்தான் அணி:

ஹஸ்ரதுல்லா சேஸாய், முகமது ஷேஷாத் (விக்கெட் கீப்பர்), ரஹ்மதுல்லா குர்பாஸ், நஜிபுல்லா ஜட்ரான், அஸ்கர் ஆஃப்கான், முகமது நபி (கேப்டன்), குல்பாதின் நைப், ரஷீத் கான், கரீம் ஜனத், நவீன் உல் ஹக், முஜீபுர் ரஹ்மான்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஹஸ்ரதுல்லா சேஸாய் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஷேஷாத்தும் 8 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ரஹ்மானுல்லா குர்பாஸ்(10), அஸ்கர் ஆஃப்கான்(10), கரீம் ஜனத்(15) ஆகிய மூவரும் நன்றாக கிடைத்த தொடக்கத்தை பயன்படுத்தி பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய இன்னிங்ஸ் ஆடாமல், அவசரப்பட்டு அடுத்தடுத்து பெரிய ஷாட்டுக்கு முயன்று ஆட்டமிழந்தனர்.

ஆனால் 12.5 ஓவரில் 76 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட ஆஃப்கானிஸ்தான் அணிக்கு, அதன்பின்னர் கேப்டன் முகமது நபி மற்றும் குல்பாதின் நைப் ஆகிய இருவரும் இணைந்து பொறுப்புடன் நிலைத்து ஆடி, செட்டில் ஆனபின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். ஹசன் அலி வீசிய 18வது ஓவரில் 21 ரன்கள் அடித்தனர். ஹாரிஸ் ராஃப் வீசிய 19வது ஓவரிலும் 3 பவுண்டரிகளை அடித்தனர். கடைசி ஓவரை ஷாஹீன் அஃப்ரிடி நன்றாக வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

20 ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணி 147 ரன்கள் அடிக்க, 148 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் வெறும் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் 3 ஓவர்களை அருமையாக வீசி ரன்களை கட்டுப்படுத்தினார். முஜிபுர் ரஹ்மான் ரன்னை கட்டுப்படுத்தினாலும், கேப்டன் முகமது நபி ரன்களை சற்று அதிகமாக வழங்கினார்.

முஜிபுர் ரஹ்மான் தொடர்ச்சியாக 4 ஓவர்களை வீசி 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். 10 ஓவர்கள் வரை ரஷீத் கானை கொண்டுவரவேயில்லை ஆஃப்கான் கேப்டன் முகமது நபி. 11வது ஓவரில் தான் ரஷீத் கானை பந்துவீசவே வைத்தார் நபி.

11, 13, 15 மற்றும் 17 ஆகிய 4 ஓவர்களை வீசிய ரஷீத் கான், 15வது ஓவரில் முகமது ஹஃபீஸை 10 ரன்னுக்கும், 17வது ஓவரின்(அவரது ஸ்பெல்லின்) கடைசி பந்தில், அரைசதம் அடித்திருந்த பாபர் அசாமை 51 ரன்னுக்கு வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

18வது ஓவரை வீசிய நவீன் உல் ஹக் வெறும் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து சீனியர் வீரரான ஷோயப் மாலிக்கை வீழ்த்தினார். கடைசி 2 ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட, கரீம் ஜனத் வீசிய 19வது ஓவரில் 4 சிக்ஸர்கள் விளாசி அந்த ஓவரிலேயே ஆட்டத்தை முடித்தார் ஆசிஃப் அலி.

இதையடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளை பெற்று ஒரு காலை எடுத்து டி20 உலக கோப்பை அரையிறுதியில் வைத்துவிட்டது.
 

click me!